விலைவாசி உயர்வு - வேண்டும் விவசாய பட்ஜெட்

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று உளம் குமுறினார் மகாகவி பாரதி. ஆனால், சர்வதேச உணவு அமைப்பின் அறிக்கைப்படி நாள்தோறும் 26 கோடி பேர் பட்டினியால் வாடும் இந்தியாவில், சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் அரிசி, கோதுமையை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதனை செயல்படுத்த நமது அரசு மறுத்துவருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வு, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. கடந்த இரு மாதங்களில் அரிசி, கோதுமை, காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு 20 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 15 ரூபாயாக இருந்த வெங்காயத்தின் விலை 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. சர்க்கரை விலை 22 ரூபாயில் இருந்து 36 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலையேற்றம் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. காய்கறிகள் வாங்க மார்க்கெட் செல்லும் மக்கள், அவற்றின் விலையைக் கேட்டு மிரள்கின்றனர். வெங்காயம், பூண்டு இல்லாமல் சமைப்பது எப்படி? என்பன போன்ற டிப்ஸ்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

‘பணவீக்கம் விரைவில் குறையும், அதனால் விலைவாசியும் 15 நாட்களில் குறைந்துவிடும்’ என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. “இன்று போய் நாளை வா” என சனிபகவானிடம் விநாயகர் கூறியது போல மத்திய அரசின் முழக்கம் நீடிக்கிறதே தவிர அந்த 15 நாட்கள் இன்னும் வரவில்லை போலும். பணவீக்க விகிதம் அத்தியாவசியப் பொருட்களின் உண்மையான விலை நிலவரத்தைக் காட்டுவதில்லை. ஏனெனில், நமது நாட்டில் பணவீக்கம் மொத்த விலை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. ஆனால், அரிசி, கோதுமை, காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை சில்லறை விற்பனைக் கடைகள்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கின்றன.

நடைமுறையில், மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. உதாரணமாக, கடந்த பொங்கல் சீசனில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 7 ரூபாய்க்கு விலைபோன ஒரு கரும்பு, லாரி மூலம் தாம்பரத்தை தாண்டி கொண்டு செல்லப்பட்டதும் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம், காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தாலும், அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் பெரிதாக பலனை அறுவடை செய்துவிடவில்லை என்பது தௌ¤வாகிறது. அவர்களுக்கு எப்போதும் போல அடிமாட்டு கொள்முதல் விலையே கிடைக்கிறது.

விவசாயிகளிடம் இருந்து பல கைகள் மாறி மொத்த விற்பனைக் கூடத்திற்குச் செல்லும் விளைபொருட்கள், மீண்டும் பல கரங்கள் தாண்டியே நுகர்வோரைச் சென்றடைகின்றன. இதன் காரணமாக, விவசாயிகள் பெறும் கொள்முதல் விலைக்கும், நுகர்வோர் அளிக்கும் விற்பனை விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. இதுவே, வியாபாரிகளுக்கு கொள்ளை லாபமாக அமைகிறது. இதுபோன்ற இடைநிலை வியாபாரிகள் அல்லது இடைத் தரகர்கள் பலரிடம் ஒரு சிறிய அறை கூட கிடையாது. ஒரு செல்போனை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விளைபொருட்களை கைமாற்றும் இவர்கள், அதற்கு விலையாக பெரும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். ஆனால், நித்தமும் உழைத்து காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கு பணமில்லாமல் திண்டாடுகின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசு என்ன சொல்கிறது? வழக்கம் போல இயற்கையின் சதி என்று கூறி மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய்விட்ட வேளாண் அமைச்சர் சரத்பவார், காய்கறிகளின் விலை உயர்வுக்கு வேளாண்துறை பொறுப்பாக முடியாது என்கிறார். பதுக்கல் குறித்து கேட்டால், அதனைத் தடுக்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று அவர் கூறுகிறார். அப்படியென்றால், வேளாண் துறை அமைச்சராக சரத்பவாரின் பொறுப்புகள் தான் என்ன? காலரியில் அமர்ந்து கொண்டு ஐபிஎல் போட்டிகளைக் கண்டு ரசிப்பது தானா?

தமிழக அரசோ ‘ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், உழவர் சந்தை விரிவாக்கம், நியாயவிலைக் கடைகளில் பருப்பு விற்பனை, கூட்டுறவு நடுவங்களில் 50 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை’ என விலைவாசி உயர்வை தடுக்க இமாலய முயற்சிகளை எடுத்துவிட்டதாக மார்தட்டுகிறது. ஒரு ரூபாய் அரிசித் திட்டம் பொதுமக்களைவிட கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியானதாக அமைந்துள்ளது. உழவர் சந்தை திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்டது. பருப்பு, காய்கறி விற்பனை போன்ற பிற திட்டங்களும் நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டதாகவே உள்ளன. கிராமப்புறங்களில் காய்கறிகள் விளைந்தாலும், அங்குள்ள சில்லறை வியாபாரி நகர்ப்புற மொத்த விற்பனைக் கூடங்களில் இருந்தே காய்கறிகளை கொள்முதல் செய்கிறார். எனவே, கிராம மக்களும் காய்கறிகளுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது.

விலைவாசி உயர்வில் முக்கிய பங்கு வகிக்கும் பதுக்கல் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேவைத்துறைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கைது செய்யும் அரசு, மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையான உணவுப் பொருள் பதுக்கல் குற்றத்திற்காக இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை என்பதில் இருந்து அரசு யாரைப் பாதுகாப்பதில் முனைப்பு காட்டுகிறது என்பது தௌ¤வாகிறது.

‘அத்தியாவசியப் பொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு’ என்பது ஊடகங்களில் ஆண்டுதோறும் வரும் தலைப்புச் செய்தியாகிவிட்டது. ஆனால், இதில் இருந்து நமது அரசுகள் ஒருபோதும் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. வேகமாக சுருங்கி வரும் விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க அரசுகள் எந்தவொரு முன்மாதிரி நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறும் நம் நாட்டில் மழைக்காலங்களில் வெள்ள நிவாரணமும், கோடை காலங்களில் வறட்சி நிவாரணமும் தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதனைத் தடுக்க, மழைக்காலங்களில் கடலில் வீணாகும் மழைநீரை சேமிக்க புதிய அணைகளோ, தடுப்பணைகளோ கட்டும் திட்டங்கள் சமீப காலமாக மேற்கொள்ளப்படவில்லை. ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றவை முறையாக தூர்வாரப்படுவதில்லை. மாறாக, இன்றைய ஆட்சியாளர்களின் துணையுடன் ரியல் எஸ்டேட் அதிபர்களால் வீட்டுமனைகளாக்கப்பட்டு சட்டவிரோதமாக அவை விற்கப்படுகின்றன.

விளைவிக்கப்படும் காய்கறிகள் கூட சேமிக்க வழியில்லாமல் பல நேரங்களில் அழுகிவிடுகின்றன. சில நேரங்களில் சாக்கின் விலைக்கு கூட அதில் இருக்கும் காய்கறிகள் விலை போகாததால், அவற்றை சாலைஓரங்களிலேயே விவசாயிகள் கொட்டிவிடுகின்றனர். இந்நிலையை மாற்ற கிராமங்கள் தோறும் அரசு செலவில் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுக்கலாம். ஒரே ஆண்டில் 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிட்டுள்ள நமது அரசுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

அடுத்ததாக, பட்ஜெட்களில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விவசாயக் கடன் வழங்க ஒதுக்கும் மத்திய அரசு, அது நேரடியாக விவசாயிகளைச் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய கடன்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். ஏனெனில், விளைநிலங்களைக் காட்டி வேளாண் கடன் பெறுவோரில் பெரும்பாலானோர், அந்த பணத்தை கந்துவட்டி போன்ற பிற தொழில்களுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் கூற்றுப்படி, ரயில்வே பட்ஜெட்டைப் போல விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தயாரிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே விவசாயிகளின் தேவைகளை முழுமையாகக் கண்டறிந்து பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவதோடு, விற்பனை முறையையும் முறைப்படுத்தினால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கச் செய்யலாம்.

நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகள், நடுத்தர மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு பிரச்சனையில் கவனம் செலுத்த தவறினால் மக்களின் ஆத்திர அலையில் அரசுகள் காணாமல் போய்விடும் என்பது திண்ணம்.

0 comments:

Post a Comment