இணைப்புச் சக்தி எது?


சமூகத்தை ஒன்றாக பிணைத்து வைத்திருக்கும் சக்தி உண்மையிலேயே அன்புதானா? கேள்விக்குரியது. நிலத்தின் மீதுள்ள மேடு, பள்ளங்களை பாய்ந்தோடி வரும் நதி வெள்ளம் மேவிச் செல்வது போல, மனித சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அடுத்தடுத்துள்ள அதிகார அடுக்குகளில் மனிதர்கள் சரியாகப் பொருந்துவதாலேயே அமைதி நிலவுகிறது. 

உலகத்தில் எப்போதெல்லாம் அதிகாரச் சமநிலை குலைந்து போகிறதோ அப்போதெல்லாம் சமூகம் பேரழிவைச் சந்திக்கிறது.சமூகம் நிர்ணயித்துள்ள அதிகார அடுக்குகளில் பொருந்தாமல், சமூகத்தோடு பொருதி நிற்கும் மனிதர்களே மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். அவ்வாறான மனிதர்களில் ஒருசிலர் மட்டுமே சமூகத்தை மாற்றியமைத்து வரலாறாகின்றனர். பெரும்பாலானோரை இந்த சமூகம் தின்று செரித்துவிடுகிறது. 

சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதரும் தத்தமக்கு இயன்ற அளவுக்கு தாக்கங்களை ஏற்படுத்தவே செய்கின்றனர். அந்த தாக்கத்தின் வீச்சு ஒரு வரையறைக்குட்பட்டது. பெரும்பாலானோரின் இருப்பு வெளியே தெரியும் அளவுக்கு அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் வீச்சு இருப்பதில்லை. பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ மாற்றத்தை ஏற்படுத்தியவர்களே இன்று நமக்கு வரலாறாகியுள்ளனர்.

உலகை மாற்றியமைத்தது தனி மனித ஆளுமைகளே அன்றி கொள்கைகளோ, கோட்பாடுகளோ அல்ல. சோவியத் யூனியனை கட்டியெழுப்பியது லெனினின் தனி மனித ஆளுமை என்றால், உலகின் முதன்மை வல்லரசாக சோவியத் யூனியனை மாற்றியது ஸ்டாலின் என்ற ஆளுமையும், அவரது சுய தேவைகளும், சொந்த விருப்பங்களுமே. கம்யூனிசத்திற்கு சக்தி இருந்திருந்தால், உண்மையில் மக்களை பிணைத்து வைத்திருந்தது கொள்கைதான் என்றால் சோவியத் யூனியன் இன்றும் உயிர் வாழ்ந்திருக்கும்.

ஒருவன் பிறக்கும் போதே அவன் மீது அதிகாரத்தின் நிழல் படிந்து விடுகிறது. வளர்ப்பும், இளமையும் இந்த சமூகத்தில் அவன் யார், அவனது பொறுப்பு என்ன என்பதை முளையிலேயே தீர்மானித்து விடுகின்றன. 

அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் உண்மையான அன்பை ஒருவன் பெற முடியாது. மற்ற உறவுகள் அனைத்தும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை மையமாகக் கொண்டே அமைகின்றன. தேவைகளும், நிர்ப்பந்தங்களுமே உறவுகளைத் தீர்மானிக்கின்றன. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால் உறவுகள் நிலைப்பதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, இதில் அன்பு எங்கிருந்து வந்தது?

எது ஜனநாயகம்?


தேர்தலில் வாக்களித்து புதிய அரசை தேர்வு செய்வதாலேயே இந்தியா முழுமையான ஜனநாயக நாடாகிவிடுமா? ஆட்சி நடத்தும் முறை ஜனநாயகமய வேண்டாமா? இங்கு, முழுமையான நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிறதா?

ஒரு தேசத்தில் ஜனநாயகம் நிலவுகிறதா என்பதை அரசு என்ற நிர்வாக அமைப்பு, தேர்வு செய்யப்படும் முறை தீர்மானிப்பதில்லை. மாறாக, ஆட்சி முறை, ஆட்சியாளர்கள் செயல்படும் விதம் ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச உறவுகளையும், வெளிநாட்டு உடன்படிக்கைகளையும், பொருளாதார கொள்கைகளையும் மத்திய அமைச்சரவையே தீர்மானித்து விடுகிறது. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் அந்த முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கிடையாது என்பதால் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் போய் விடுகிறது. 

இந்தியாவில், நாடாளுமன்றம் வெறுமனே, ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் மன்றமாக மட்டுமே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மத்திய அரசின் எந்தவொரு முடிவு குறித்தும் நாடாளுமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. தேவை ஏற்படும் போதெல்லாம், ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலே போதும். பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை சரித்திரம் நமக்கு ஏற்கனவே உணர்த்தியுள்ளது. 

பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்படும் தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய, தகுந்த மாற்று ஏற்பாடுகள் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை என்பதை இந்திரா ஏற்கனவே நமக்கு நிரூபித்துவிட்டார். 

அதிகாரமும், பண பலமும் நீதித்துறையைக் கூட அசைத்துப் பார்த்து விடுகின்றன. ஐந்தாவது தூண் என்று பீற்றிக் கொள்ளும் வெகுஜன ஊடகங்களும், பத்திரிகைகளும் வருமானத்தைப் பெருக்கும் நோக்குடனே செயல்படுகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மையை துணிந்து கூறுபவை வெகு சிலவே. அவற்றையும், மக்களுக்கு எட்டா வண்ணம் செய்துவிட ஆட்சியாளர்களால் முடியும். 

நீதித் துறையும், அரசு நிர்வாக அமைப்புகளும் ஏழை குடிமகன்களுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கின்றன. இந்த லட்சணத்தில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை வேறு. ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது மட்டுமல்லாமல் ஆட்சி நடத்தும் முறையும் ஜனநாயகமயப்பட்டால் மட்டுமே அந்த வார்த்தை முழு அர்த்தம் பெறும். அதற்கு ஏற்ற வகையில் அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மாற்றியமைக்க வேண்டும். 

தாயன்பைப் போல இயற்கை விதிகள் மட்டுமே மாறாதவை. மனிதன் வகுத்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஜனநாயகம் ஒன்றும் சர்வரோக நிவாரணி கிடையாது. நிலை பேறானதும் கிடையாது. ஒவ்வொரு கால கட்டத்திலும், தகுதி படைத்த ஒருவன் தோன்றி புதிய விதிகளை படைத்துக் கொண்டேதான் இருக்கிறான்.

நுகர்வுக் கலாச்சாரம்


மேலை நாடுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமல்ல, நுகர்வு கலாச்சாரமும்தான். 

பணம் என்பது பொருட்களை இடமாற்றும் ஒரு ஊடகம் மட்டுமே. பண்டமாற்று முறையின் மேம்பட்ட வடிவமே பணம். பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு தனி மனிதனின் அல்லது கூட்டத்தின் சிந்தனையிலோ, உழைப்பிலோ உருவானவை. பொருட்களின் மதிப்பை பணத்தின் அடிப்படையில் நிர்ணயிப்பதன் மூலம், தனி மனிதனின் உழைப்பிற்கும் மறைமுகமாக நாம் விலை வைக்கிறோம். 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தனி மனிதனும் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே பொருள் உற்பத்தி அதிகரித்து சமூகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு சாத்தியமாகும். அதாவது, ஒருவர் சம்பளமாக பெறும் 100 ரூபாய் காய்கறி கடைக்காரர், மொத்த வியாபாரி, விவசாயி என்று பலரிடமும் கை மாறும் போது, ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் அவருக்குத் தேவையான ஏதோ ஒரு பொருளை இடமாற்றம் செய்கிறது. அதன் மூலம், ஒவ்வொருவரின் தேவையும் பூர்த்தியாகிறது. ஒருவர் கைமாறி மற்றொருவரிடம் பணம் தொடர்ந்து இடம் மாறும் போது அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. 

அதற்குப் பதிலாக, அந்த 100 ரூபாயை சேமிப்பு என்ற பெயரில் முதலாம் நபரே முடக்கிவிட்டால் மறுபுறம் உற்பத்திப் பொருள் தேங்கிவிடுகிறது. தொழில் வளர்ச்சி தடைபடுகிறது. நம்மவர்கள் வங்கிகளில் சேமித்தாலாவது, வங்கிகள் அளிக்கும் கடன் மூலம் அந்த பணம் மீண்டும் சமூகத்தில் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், நம்மவர்கள் பணத்தை வங்கிகளில் சேமிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. தங்கமாகவும், ரொக்கமாகவும் ஏராளமான பணம் யாருக்கும் பயன்படாமல் முடங்கிக் கிடக்கிறது. 

மாறாக, பொருளாதார ரீதியாக வளர்ந்த, மேலை நாடுகளில் நுகர்வு கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம், நிலையான தொழில் வளர்ச்சிக்கு அங்கு வித்திடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான மனித உழைப்பு, கம்யூனிச நாடுகளில் மிரட்டி கட்டாயமாக வாங்கப்பட்ட போது, மேலை நாடுகள் நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவித்ததன் மூலம் எளிதாக பெற்றுக் கொண்டன. 

நுகர்வுக் கலாச்சாரம் நிலவும் சமூகத்தில் பணம் படைத்தவன், பொருட்களை வாங்கிக் குவிப்பதன் மூலம் மறைமுகமாக தொழில் வளர்ச்சிக்கு வித்திடுகிறான். பணம் இல்லாதவன் பொருட்களை வாங்க பணம் சம்பாதிக்கும் பொருட்டு கடினமாக உழைக்க தலைப்படுகிறான். ஆகவே, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான மனித உழைப்பு எந்தவொரு நிர்ப்பந்தமும் இன்றி எளிதாக கிட்டிவிடுகிறது. 

மேலை நாடுகளின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், அதன் மூலம் சாத்தியமான அரசியல், ராணுவ ரீதியான வல்லமைக்கும் அடிப்படையான மனித உழைப்பை சாத்தியமாக்கியது நுகர்வுக் கலாச்சாரமே.

பெண்ணியம் எது?


பல ஆயிரம் ஆண்டு கால பண்பாடும், கலாச்சாரமும், நாகரிக வளர்ச்சியும் தந்தை, சகோதரன் ஆகிய 2 ஆண்களிடம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளன. பாரதம் மட்டுமே இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை ஆணின் மனதில் ஆழமாக விதைப்பதன் மூலம் பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தந்தை, சகோதரன் தவிர்த்த பிற ஆடவனுடன் தனித்து விடப்படும் போது, இயல்பாகவே பாதுகாப்பு தேடும் நிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுகிறாள். அதுபோன்ற தருணங்களில், அவளது பாதுகாப்பு உணர்வு விழித்துக் கொள்கிறது. 


என்னதான் பண்பாடும், கலாச்சாரமும் ஊட்டி வளர்க்கப்பட்டாலும், அதுபோன்ற தருணங்களில் ஆண்கள் சிலரிடம் மறைந்துள்ள மிருகத்தனம் வெளிப்பட்டு விடுகிறது. ஆகவேதான், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக நேரம், ஆடைக் கட்டுப்பாடு போன்றவை பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. முழு பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையென்றாலும் கூட வரவிருக்கும் ஆபத்தை கணிசமாகக் குறைக்க அவை உதவுகின்றன. 

பெண்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க நீங்கள் யார்? எங்களுக்கான உடையைத் தீர்மானிக்க உங்களுக்கு என்ன உரிமை? சமூகத்தின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைபிடித்தும் சிலருக்கு கொடுமை நேரிடுகிறதே? என்று பெண்ணியவாதிகள் வாதிடலாம். என்ன செய்வது? தாறுமாறாக செல்லும் வாகனங்களால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் கூட சில நேரங்களில் காயமடைய நேரிடுகிறது. அதற்காக, நடுரோட்டில் நடந்து செல்ல முயன்றால் விளைவு என்ன? பாதிப்பு யாருக்கு? கனவுலகிலே சஞ்சரிக்கும் பெண்ணியவாதிகளின் தர்க்க வாதங்கள் நடைமுறை வாழ்க்கையில் துணை வருவதில்லை. 

பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பொறுப்பை கடவுள் பெண்ணிடமே கொடுத்துள்ளார். தன்னோடு, இன்னொரு உயிரையும் காப்பாற்றும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ள பெண்ணுக்கு இயற்கையிலேயே ஆணைக் காட்டிலும் போராட்டக் குணம் அதிகம். ஆனால், அழகு, மென்மை போன்ற ஆண் சமூகத்தின் வர்ணனைகளை ஏற்றுக் கொண்ட இன்றைய பெண்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை, கணவன், மகன் என்று எப்போதும் ஒரு ஆண் மகனைச் சார்ந்திருக்க பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர். 

போராட்டக் குணம், வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனங்களை வீரம் என்ற பெயரில் ஆண்கள் இன்றும் போற்றி வருகின்றனர். எல்லா பிரச்னைகளுக்கும் ஆண்களையே சாடும் பெண்ணியவாதிகள், பெண்களின் போராட்டக் குணத்தையும், பிற நேர்மறை விஷயங்களையும் சுட்டிக்காட்டலாம், சுயசார்பை போற்றி வளர்க்கலாம். ஏனெனில், இந்த பூமியில் எதுவுமே சும்மா கிடைப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் நாம் ஒரு விலை கொடுத்தே தீர வேண்டும். 

புதுமைப் பெண்களாக வாழ விரும்பினால் முழுமையான சுயசார்பை நோக்கி நடை போட வேண்டும். விளைவுகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பழமைவாதம், ஆணாதிக்க சமூகம் என்பன போன்ற பெண்ணியவாதிகளின் தேவையற்ற புலம்பல்களை கைவிட்டு, இச்சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்களின் தேர்வு இரண்டாவதாகவே இருக்கிறது.

வண்டியில் டிரைவர் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு, பாதுகாப்பான இடம் தேடி அமர்ந்துவிடும் ஒருவருக்கு வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கும் உரிமை எவ்வாறு கிடைக்கும்?

அரசாங்கம் என்பது என்ன?

இன்றைய நிலையில் இலவசங்கள் தேவையில்லை என்று கூற முடியாது, இட ஒதுக்கீடு குறித்து கேள்வியே எழுப்ப முடியாது, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும் எல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே, அரசு இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறது என்று வாதிடலாம். 

ஆனால், அரசாங்கம் என்பது என்ன? அதன் தோற்றுவாய் எது? வரலாற்றில் பின்னோக்கிச் சென்று பார்த்தால், சமூகத்திற்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிர் வாழத் தேவையான வாழ்வாதாரங்களை கிடைக்கச் செய்யவுமே அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குழுத் தலைவனில் தொடங்கி, அரசன், சர்வாதிகாரி, மக்களாட்சி என்று அரசாங்கம் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. நிர்வாக அமைப்பு எதுவாக இருந்தாலும் அரசாங்கத்தின் நோக்கமும், பணியும் முன்பு குறிப்பிட்ட இரண்டுமே.

சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஒடுக்கப்பட்டார்கள் என்பது வரலாற்றுப் பிழை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இட ஒதுக்கீடு என்ற பெயரில் மற்றொரு பிரிவினருக்கு வாய்ப்புகளை மறுப்பது எந்த வகையில் நியாயம்? ஒரு பிழையை சரி செய்ய மற்றொரு பிழை எவ்வாறு சரியாக இருக்க முடியும்? கால்வாயில் பலமான ஒரு கரையை வெட்டி, சமப்படுத்துவதன் மூலம் பலவீனமான மறுகரையை பலப்படுத்தி யாருக்கு என்ன பயன்? கால்வாய் என்ற சமூகத்தை பலப்படுத்தும் நமது நோக்கம் ஈடேறுமா?

இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலருக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன. இனி வரும் காலங்களில் இட ஒதுக்கீடு தொடரும் போது, ஏற்கனவே அதனால் பலனடைந்தோரின் வழித் தோன்றல்களே மீண்டும், மீண்டும் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக மேல் நோக்கி எழுப்ப வேண்டிய அரசாங்கம், இதன் மூலம் தனது கடமையில் இருந்து தவறிவிடுகிறது. ஆனாலும், ஒரு சிலரை திருப்திப்படுத்தி காரியம் (வாக்கு) சாதித்துக் கொள்கிறது.

இதேபோன்ற நிலைதான், இலவசங்களை வழங்குவதிலும் காணப்படுகிறது. மிகச் சில மக்களை மட்டுமே சென்றடையும் இலவசங்கள், சமூகத்தில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக அரசாங்கம் பறைசாற்றிக் கொள்கிறது. அம்மா உணவகம், அம்மா திரையரங்கம் போன்றவை சமூகத்தில் ஒரு சதவிகிதம் பேரைச் சென்றடையுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. இதுபோன்ற திட்டங்களால் அந்தந்த சந்தைகளிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. அண்மைக்கால இலவசங்களில் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை இலவச டி.விக்களே. அரசியல், நிர்வாக தகிடுதத்தங்களை படிக்காத பாமரரும் தெரிந்து கொள்ள வழிவகுத்தவை டிவிக்கள்தானே.

இட ஒதுக்கீடும், இலவசங்களும் அரசாங்க நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடுகளே. ஒட்டுமொத்த சமூகத்தையும் காக்கும் பொறுப்பில் இருந்து தவறிவிட்ட அரசு, ஒரு சிலரை மட்டுமே திருப்திப்படுத்தி கடமையை முடித்துக் கொள்கிறது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். ஆனால், இலவசமாக அல்ல. அவற்றைப் போராடிப் பெறும் அளவுக்கு அவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்ய வேண்டியது அரசின் கடமை. இதன் மூலம், அவர்களின் தன்மானம் காக்கப்படுவதோடு, சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பும் கணிசமாக கிடைக்கும். அரசாங்கம் என்ற சமூக நிர்வாக அமைப்பின் நோக்கமும், செல்லும் பாதையும் அதை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

அம்மா


மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் கடவுள் அளித்த உறவு அம்மா மட்டுமே. அது ஒன்றே நிரந்தரமானது. தாயின் ஸ்பரிசமும், அருகாமையும் தரும் பாதுகாப்பு உணர்வை வேறெங்கும், எந்த ஒரு தருணத்திலும் நாம் பெறுவதில்லை. தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உறவின் ஆழத்தை ஒருபோதும் நிரூபிக்க வேண்டியதில்லை. நினைவுபடுத்த வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், தந்தை, கணவன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைத்துமே மனிதர்கள், தங்கள் தேவைக்காக தாங்களே சிருஷ்டித்துக் கொண்டது. நிலையற்றது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்தும், தேவைகளின் பொருட்டும் மாறக் கூடியது. 


வாழ்க்கையில் முதல் பாதியை பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்துவிட்ட கடவுள், பிற்பாதி வாழ்க்கையை நம் கையில் ஒப்படைத்துள்ளார். நமக்கான உறவுகள் மற்றும் உலகத்தை படைக்கும் அல்லது தேர்வு செய்யும் உரிமை நமக்கே உரித்தானது. ஒரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் அவனது முழு வாழ்க்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடமே இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை அவசியமா?


ஆதி மனிதன் தனித்தனியாக ஆங்காங்கே சிதறி வாழ்ந்த போது நீதி, நேர்மை, உண்மை போன்ற எந்தவொரு ஒழுங்கு விதிகளும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அதற்கான அவசியமும் இருக்கவில்லை. ஆனால், படிப்படியாக குழுவாக, கூட்டமாக பின்னர் சமுதாயமாக மனிதர்கள் கூடி வாழ தலைப்பட்ட போதுதான் அமைதியையும், ஒழுங்கையும் பராமரிக்க நீதி, நேர்மை, உண்மை போன்ற ஒழுங்கு விதிகள் அவசியமாக பட்டன. பெண்களுக்கு கற்பு நெறி போதிக்கப்பட்டதும் இதன் தொடர்ச்சியே. 


சமூக வாழ்க்கையை நிலைப்படுத்தவும், நெறிப்படுத்தவும் மனிதர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்க ஒரு உயர்ந்த சக்தி பீடம் தேவைப்பட்டது. அந்த உயர் சக்தி பீடமே பின்நாட்களில் கடவுள் என்றானது. உண்மையில், கடவுளுக்கு அடியார்களோ, பக்தர்களோ, தொண்டர்களோ தேவையில்லை. ஆனால், சமூகத்தை நெறிப்படுத்தவும், மனிதர்களை பண்படுத்தவும் சமூகத்திற்கு கடவுள் என்ற கற்பிதம் அவசியம் தேவை. பக்குவப்படாத, பண்படாத மனிதர்களுக்கு கடவுளை மனதில் இருத்த கடவுளுக்கு ஒரு வரி வடிவமும் கொடுக்கப்பட்டது.

வன்முறையைத் தவிர்க்க இயலுமா?


மனித இனம் ஒவ்வொரு கால கட்டத்திலும் மூதாதையர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள், பண்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்கிறது. ஆனால், விலங்கினங்களில் ஒன்றான மனித இனம், இயற்கை கொடுத்த, இயல்பாய் அமைந்த காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து ஒருபோதும் விடுபட்டதில்லை. அதன் வெளிப்பாடு வேறுவேறு வடிவங்களில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எல்லா உயிரினங்களைப் போல மனிதர்களும் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள். 


உடல் எடையைத் தாங்கும் வேலையில் இருந்து விடுபட்டு கைகள் சுதந்திரமாக இயங்கியதும், மேம்பட்ட தகவல் தொடர்பும் மற்ற எல்லா உயிரினங்களையும் மனிதர்கள் வெல்லச் செய்தன. ஏன், ஐரோப்பியர் காலடி பதித்த இடங்களில் செவ்விந்தியர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் உலகம் முழுவதும் வேட்டையாடப்பட்டு, மனிதர்களில் ஒரு பகுதியினர் ஒழிக்கப்பட்டனர். ஆயுதங்களும், வழிமுறைகளும் மாறியதே தவிர வேட்டையாடும் காட்டுமிராண்டித்தனமும், வன்முறையும் மாறவே இல்லை. 

வாழ்வாதாரத்திற்கான தனி மனிதனின் போராட்டமே சண்டையாகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான சண்டை போர் என்று அறியப்படுகிறது. எதிர்காலத்திலும், வாழ்வாதாரங்களுக்காக மனிதர்கள் போரிட வேண்டியிருக்கும். ஏனெனில், பூமியில் உள்ள வாழ்க்கை வளங்கள் அளவற்றதாக இல்லை. சூழலை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் அழிந்தே தீர வேண்டும் என்பது இயற்கை நியதி. பிரச்னைகளையும், சண்டைகளையும் சிறிது காலம் தள்ளி வைக்கலாமே தவிர, நிரந்தரமாக ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய கல்வியால் பயன் என்ன?


இன்றைய கல்வி முறை ஆண் - பெண் திருமண வயதை உயர்த்தியதைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறது?. இரண்டரை வயதில் பள்ளி என்னும் தொழிற்சாலைக்குள் திணிக்கப்படும் குழந்தை, பட்டதாரியானால் 21 வயதில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் ரோபோவாக வெளியே வருகிறது. 3 வயதில் வீட்டில் பெற்றோரை மகிழ்விக்க ரைம்ஸ் பாடியும், ஆடியும் காட்டும் அவன், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், தேர்வு போன்ற நிர்ப்பந்தங்களின் பேரில் செயல்படுகிறான்.


வீட்டில் வயதில் பெரியவர்களை மீறி அவனால் செயல்பட முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களைத் தாண்டி அவனால் சிந்திக்கக் கூட முடிவதில்லை. எப்போதும் பிறரின் கட்டளைக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் காத்துக் கிடக்கும் ரோபோவாக மாற்றப்படும் அவன், அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளின் முட்டாள்தனங்களைக் கூட கண்மூடித்தனமாக செயல்படுத்துகிறான். பின்னர், வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவனை மீளவோ, திரும்பிப் பார்க்கவோ, குறைந்தபட்சம் மறு ஆய்வு செய்யவோ கூட முடியாத இடத்திற்கு இட்டுச் சென்று விடுகின்றன.

சுயமாக சிந்திக்கக் கற்றுத் தராத நமது கல்வி முறை தனி மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பதிலும் எதிரொலிக்கின்றன. ஆகவேதான், தேசத்தின் மீட்சிக்கான, மறுமலர்ச்சிக்கான திட்டங்களை நாம் அமெரிக்காவிலும், சோவியத் யூனியனிலும், ஐரோப்பாவிலும் தேடிக் கொண்டிருக்கிறோம். புதிய கோணங்களில் சிந்தித்து, வெவ்வேறு பரீட்சார்த்த முறைகளை தைரியமாக செயல்படுத்தும் தலைவர்களை உருவாக்க நமது கல்வி முறை தவறிவிட்டது.

தேசத்தின் இன்றைய தேவை ஆட்சி மாற்றம் அல்ல. புரையோடிப் போய்விட்ட காயத்தை, வெறுமனே பேன்டேஜை மட்டும் மாற்றுவதால் குணப்படுத்திவிட முடியாது. குழந்தை வளர்ப்பு, சுயமாக சிந்தித்துச் செயல்படும் ஆரோக்கியமான, பண்பட்ட மனிதர்களை தரும் சிறந்த கல்வி என மனித ஆளுமைகளை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக் கூடிய சமூகப் புரட்சியே இன்றைய தேவை.