சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி












ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
(ஒரு கல்..)

திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே
(ஒரு கல்..)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்
(ஒரு கல்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: அட்னான் சாமி

உன்னைப் போல் ஒருவன்


திரையுலகில் பொன்விழா காணும் கமலஹாசன் நடித்து வெளிவந்துள்ள படம் உன்னைப் போல் ஒருவன். இந்த படம் குறித்து ஏற்கனவே பல வலைப்பதிவர்கள் தங்கள் பிளாக்குகளில் விமர்சனம் வெளியிட்டு விட்டனர். ஆகவே சன் டிவி டாப் டென்னில் கூறுவது போல ஏற்கனவே இதுகுறித்து தேவையான அளவு அலசப்பட்டு விட்டதால் நான் படம் குறித்த விமர்சனத்தை முன் வைக்காமல் அதுகுறித்த என் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உன்னைப் போல் ஒருவன் கதைக்களம் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் கதை சொன்ன விதம் புதிது.

தீவிரவாதத்திற்கு சரியான தீர்வு தீவிரவாதமே என்று சொல்லியிருக்கிறார் கமல். அதாவது தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையோர், அவர்களது குற்றம் உறுதி செய்யப்படுமாயின் தயவு தாட்சண்யமின்றி கொல்லப்பட வேண்டும் என்பதே படத்தின் கதை.

கமல் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாகவே வருவது சிறப்பு. குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொல்லப்பட்ட காட்சியை அவர் சொல்லும் போது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் கண்ணீர் வருகிறது. கமல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை.

பொதுவாக கமல் படத்தில் அவரே மொத்த பாராட்டுகளையும் அள்ளி விடுவார். ஆனால் இப்படத்தில் மோகன்லாலுக்கு தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். கேரளத்தை சேர்ந்தவராக, சென்னை போலீஸ் கமிஷனராக மனிதர் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய மற்றொருவர் லட்சுமி. ஏனெனில் திரைக்கதை இவர்கள் மூவரையும் மையமாக கொண்டே பயணிக்கிறது. பழக்கப்பட்ட வேடம் என்பதால் அவர் மிகவும் எளிதாக ஸ்கோர் செய்து விடுகிறார்.

படத்தில் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டிய மற்றொருவர், என்னை மிகவும் கவர்ந்தவர் ஆரிப். போலீஸ் வேடத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். அவரது பெர்சனாலிட்டி, கம்பீரமான உடற்கட்டு, கூர்மையான பார்வை என அனைத்துமே இன்றைய போலீசாருக்கு ஒரு பாடம். இறுதியில் தீவிரவாதிகளை கொன்ற பின்னர் உடன் வந்த அவரது நண்பரான மற்றொரு போலீஸ்காரர் அவரது கையில் சுடும் போது அவர் சற்றும் திகைப்பை வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக "சொல்லிவிட்டு செய்திருக்கலாமே" என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அசத்தியிருக்கிறார். இந்த காட்சியில் அவர் தன் நண்பர் மீதான நம்பிக்கையையும், காவல்துறை மீது அவருக்கிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வையும் ஒரே சமயத்தில் அற்புதமாக வெளிக்காட்டியிருப்பார்.

படத்தின் சிறப்பம்சங்கள்:

படத்தில் நிஜ முதல்வரின் வீட்டையும், அவரது குரலையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. கமல் போன்ற ஜாம்பவான்களால் தான் இது முடியும்.

ஆக்ஷன் படமாக இருந்த போதிலும் படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் என எதுவுமே இல்லாமல் இருப்பது தமிழுக்கு புதிதான விஷயம் என்றாலும் பெரும் எதிர்பார்போடு படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தரக்கூடும்.

படத்தில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் சண்டைக்காட்சிகள் கிடையாது. நேற்று வந்த சின்னச்சின்ன நடிகர்கள் கூட சண்டைக்காட்சிகளை கட்டாயப்படுத்தி தங்கள் படங்களில் திணிக்கும் போது கமல், மோகன்லால் என இரு மெகா ஸ்டார்கள் இருந்தும் படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லாதது வியக்கத்தக்க விஷயம் தான்.

திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்கும் விதத்திலான குத்துப்பாட்டுகள் படத்தில் கிடையாது. திரைக்கதை தெளிந்த நீரோடையாக செல்வது அருமை.

படத்தில் கமல், மோகன்லால் இருவருக்குமே ஜோடி கிடையாது. கமலின் மனைவி அவருடன் போனில் பேசுவதோடு சரி. காட்சிப்படுத்தல் இல்லை.

உன்னைப் போல் ஒருவன் - ஆர்ப்பாட்டமில்லாத ஒரு ஆக்ஷன் படம்.

பண்டைய உலக அதிசயம் - கிசே பிரமிடு

பண்டைய உலக அதிசயங்களாக கருதப்படுவன ஏழு. அவற்றுள் இன்று வரை நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள கிசே பிரமிடு மட்டுமே.



பண்டைய எகிப்தியர்கள் மனிதனின் இறப்பிற்கு பின்னரும் வாழ்க்கை உண்டு என்று நம்பினர். ஆகவே எகிப்தியர்கள் இறந்த பிறகு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆபரனங்கள் ஆகியன இறப்பிற்கு பிந்தைய வாழ்விற்காக அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டன.

இறந்த பின்னரும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையால் தான் எகிப்திய மன்னர்கள் இறந்த பிறகு, அவர்களது உடல்கள் பதப்படுத்தப்பட்டு இந்த பிரமிடுகளில் மம்மிக்களாக வைக்கப்பட்டன. மேலும் மன்னர் உயிரோடிருந்த போது அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் உள்பட தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றாலான விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றுடன் அவர்களின் மனைவியர், மந்திரிசபையினர், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டனர். எகிப்திய மன்னர்கள் மட்டுமின்றி மகாராணி, மந்திரிகள், மதகுருமார்கள் ஆகிய அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப தனித்தனியே மன்னருக்கு அருகிலேயே பிரமிடுகள் கட்டப்பட்டன.

பிற்காலத்தில் இந்த பிரமிடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களுக்காக அவை கொள்ளையடிக்கப்பட்டன. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு குழுக்கள் எகிப்து நாட்டிற்கு வந்து, அந்த பாலைவன மணலில் தங்க வேட்டை நடத்தினர். அவர்களில் சிலருக்கு தங்கப்புதையல் கிடைத்தது. ஆனால அங்கு நிலவிய மோசமான தட்பவெப்ப நிலையை தாங்க முடியாமல் பலர் மரணத்தையே தங்கள் தேடலின் பரிசாக பெற்றனர்.

இத்தகைய கொள்ளை சம்பவங்களின் மூலம் எகிப்து பிரமிடுகளில் இருந்த விலை மதிப்பு மிக்க பொருட்கள் சட்ட விரோதமாக பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டன. எகிப்தியர்களின் விலை மதிக்க முடியாத பண்டைய கலைக்களஞ்சியங்கள் காணாமல் போயின. இதன் காரணமாக பண்டைய எகிப்திய நாகரிகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வுகள் போதிய பலனை தரவில்லை.

இந்த நிலையில் தான் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதாக கிசே பிரமிடு கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக அது கொள்ளையடிக்கப்படாமல் முழுமையாக இருந்தது. இதுதான இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரமிடுகளிலேயே மிகவும் பெரியது. மிகவும் பழமையானதும் கூட. கி.மு. சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. இது பண்டைய எகிப்து மன்னர் குபுவின் நினைவாக கட்டப்பட்டது. இதுதான் மனிதனால் கட்டப்பட்ட மிகவும் உயரமான கட்டிடமாக சுமார் 3800 ஆண்டு காலம் விளங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் உயரம் 146.6 மீட்டர். ஆனால் தற்போது இதன் வெளிப்புறப்பகுதி சிதைவடைந்துள்ளதால் சுமார் 138.8 மீட்டர் உயரமுடையதாகவே உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கமும் 230.5 மீட்டர் நீளமுடையது. இந்த பிரமிடின் மொத்த எடை சுமார் 59 லட்சம் டன்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க சுமார் 14 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

இந்த பிரமிடில் இருந்து குபு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி) உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பண்டைய எகிப்தியர்களின் நாகரிகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. இந்த பிரமிடின் வரலாறு குறித்து இதுவரை பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்துள்ளன.

இதுகுறித்து மேலும் விபரங்கள் அறிவதற்காக அப்துல்-ஹலிம் நூர்-எல்டின் தலைமையிலான எகிப்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில், கி.மு. 2470ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி கிசே பிரமிடின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாவது:

தற்போது சிரியஸ் என்று அழைக்கப்படும் நட்சத்திரம் பண்டைய எகிப்தில் சோதிஸ் என்றழைக்கப்பட்டது. இந்த நட்சத்திரம், ஒவ்வொரு ஆண்டும் நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்திற்கு முன்னதாக அதிகாலையிலேயே வானில் தோன்றும். இதை கணக்கிட்டே பண்டைய எகிப்தியர்கள் நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படவிருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் ஆற்றின கரையோரங்களில் படிந்திருக்கும் பிரஷ்சான புதிய மண்ணை கொண்டு தான் எகிப்தியர்கள் தங்களது முக்கிய கட்டிடங்கள், கல்லறைகள் (பிரமிடுகள்), கோவில்கள் ஆகியவற்றை கட்டுவது வழக்கம். ஏனென்றால் இது தான் வளமையின் அடையாளமாக கருதப்பட்டது.

பொதுவாக எகிப்திய மன்னர்கள் தங்களுக்கான கல்லறைகளை (பிரமிடு) தாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே கட்ட தொடங்கி விடுவர். ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட கிசே பிரமிடு குபு என்ற மன்னனுக்காக கட்டப்பட்டது.

இந்த மன்னர் கி.மு. 2470ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். ஆகவே அந்த ஆண்டே அவர் தனது கல்லறைக்கான (பிரமிடு) கட்டுமானப்பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் புதிய மண்ணை கொண்டே பிரமிடுகள் கட்டுவது வழக்கம் என்பதால் அந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலம் தொடங்கிய பிறகு தான் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி இருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் நோக்கின், அந்த ஆண்டு சோதிஸ் நட்சத்திரம் ஜுலை 17 முதல் 19ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் தோன்றியுள்ளது. அதற்கு பின்னர் சரியாக 35 நாட்களுக்கு பிறகு அதாவது ஆகஸ்டு 23ம் தேதி தான் வெள்ளப்பெருக்கு காலம் தொடங்கியுள்ளது. ஆகவே கி.மு. 2470ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதி தான் கிசே பிரமிடு கட்டத் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வுக்குழு தலைவர் நூர்-எல்டின் தெரிவித்துள்ளார்.

ஆய்வுகள் தொடர்ந்து வருவதால் பண்டைய எகிப்திய நாகரிகம், அவர்களின் உயர்ந்த வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் சிறந்த மதிநுட்பம் ஆகியன குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவரக் கூடும்.

டக்வொர்த் லூயிஸ் முறை - உருவானகதையும் எளிய விளக்கமும்

இங்கிலாந்தின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் நகமும் கடிக்கப்பட்டிருக்கும் அன்றைய தினம். இங்கிலாந்து அந்த ஆட்டத்தில் தோற்றால் உலகக்கோப்பையிலிருந்து அந்த அணி வெளியேறிவிடும். கருப்பின பிரச்சனையில் இருந்து மீண்டு தென்னாப்பிரிக்க அணி பல வருடங்களுக்கு பின் ஆடுகிற உலகக்கோப்பை அது. தென்னாப்பிரிக்கா அந்த உலகக்கோப்பை ஆரம்ப போட்டிகளில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து தன் இருப்பை ( கிரிக்கெட்) உலகத்திற்கே பறைசாற்றியிருந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 45 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 42.5 ஒவர்களில் 236/6 என்ற நிலையில் மழைக்குறுக்கிடுகிறது.

13 பந்துகள் 21 ரன்கள் . மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் துவங்குகிறது. அதிர்ச்சி. ஒரே பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என தெ.ஆப்பிரிக்க அணிக்கு இயலாத டார்கெட் வழங்கப்படுகிறது. ஆட்டத்தை இங்கிலாந்து அணி வென்றது. ஒரு வேளை அந்த ஆட்டத்தில் அப்படி ஒரு ஒருதலைபட்சமான டார்கெட் வழங்கப்பட்டிருக்காவிட்டால் அந்த உ.கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கலாம்.

அன்றைய காலக்கட்டத்தில் அப்படி ஒரு டார்கெட்டை வழங்க உபயோகித்த முறை மிக மோசமானது. ஒருதலைபட்சமானது. ரன்ரேட் விகிதத்தையும் அதே ஒவரில் எதிர் அணி முதல் இன்னிங்சில் பெற்ற ரன்களையும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுபவை. இரண்டாவது இன்னிங்சில் ஆடும் அணியின் விக்கெட்டுகளும் கணக்கிலெடுக்கப்படாது. பல வருடங்களுக்கு அந்த முறையே வழக்கமாகி இருந்தது. பல மேட்ச்களுக்கும் அதுவே முதலில் பேட் செய்யும் அணிக்கு பல நேரங்களிலும் உதவியாய் இருந்திருக்கிறது.

தமிழ்சினிமாக்களில் ஏழைகளும் வலிமையில்லாதோரும் அடிவாங்கும்போது அவர்களெல்லாம் கதறி அழ ''நம்மள காப்பாத்த யாருமே வரமாட்டாங்களா?'' என சோகமாய் கேட்பார்கள். அப்படித்தான் கிரிக்கெட் அணிகளும் மேட்ச்சுக்கு நடுவே வருகின்ற மழையை விட அதனால் உண்டாக இருக்கும் டார்கெட் பிரச்சனையால் கதறிக் கொண்டிருந்தனர். பல விதவிதமான முறைகளை கையாண்டு தோற்றனர் ஐசிசியும் அகில உலக கிரிக்கெட் ஆர்வலர்களும். ஹீரோக்களைப்போல வந்தனர் இரண்டு பேர்.



பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் அதுதான் அவர்களது பெயர். பிற்காலத்தில் தங்களது பெயர் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாத பெயராகப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 1994ஆம் ஆண்டு மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி மாணவர்கள் அவர்கள். தங்களது பட்டப்படிப்பின் இறுதியாண்டு பிராஜக்ட்டுக்காக புதுமாதிரியான சிந்தனையோடு உருவாக்கிய கணக்கீட்டு முறைதான் இன்று நம்மில் பலரும் மண்டையை குடாய்ந்து சிந்திக்கும் அந்த டி/எல் கணக்கீட்டு முறை.


1995ல் இருவருமாக இம்முறை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசியிடமும் விளக்கியுள்ளனர். 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து , ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டியில் இம்முறை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் உலக கிரிக்கெட்டில் இருந்த கணக்கீட்டு முறை PARABOLA எனப்படும் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளார்க் என்பவரின் முறையே. டி/எல் முறை அதைவிட நேர்த்தியாகவும் பாரபட்சமற்ற முறையில் இருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதியது. ஐசிசி உடனடியாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்னரே கூடி பேசி முடிவெடுத்தது.

5 வருடங்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் தேதி ஐசிசி இம்முறையை அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் ( முதல்தர ஒரு நாள் போட்டிகளுக்கும்) பொதுவான ஒன்றாக அறிவித்தது. டக்வொர்த் மற்றும் லூயிஸிடம் இந்த முறைக்கான யோசனை எப்படித்தோன்றியது எனக்கேட்ட போது 1992 ஆம் ஆண்டு இங்கி-தென் ஆப்பிரிக்காவின் போட்டியில் ஒரு வேளை அப்போது கையாண்ட முறை இங்கிலாந்துக்கு எதிராக அமைந்திருந்தால் என்கிற கேள்வியே இது போன்ற முயற்சிக்கு விதையாக அமைந்ததாக தெரிவித்தனர்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இந்த டக்வொர்த் லூயிஸ் முறையில் எப்படி கணக்கிடுகிறார்கள் என்கிற ஐயம் பலருக்கும் உண்டு. புரிந்து கொள்ளும் வரை அது மிகசிக்கலான மற்றும் புரிந்து கொள்ள இயலாத ஒன்றாகவே தெரிந்தது.. அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினால் அது ஒன்றுமே இல்லாத வாய்ப்பாட்டு முறை என்பது நிதர்சனமானக தெரிந்தது.

அதைக்குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் , பொறுமையும் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்.


முதலில் சில அஸ்திவார குறிப்புகள்.

*இரண்டு அணிகளும் குறைந்தது 20 ஓவர்களாவது விளையாடினால் மட்டுமே டி/எல் முறை கணக்கிலெடுக்கப்படும்

* ரிசோசர்சஸ் (Resources ) - இதுதான் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளும் இந்த முறையின் மிகமுக்கியமான காரணி . அதை நாம் சக்தி அல்லது அணியின் பலம் என்று அழைக்கலாம்.

*அதாவது இரண்டு அணிகளுக்கும் சமமான அளவில் 10 விக்கெட்டுகள் மற்றும் ஐம்பது ஓவர்கள் என்பது இங்கே '' பலமாக'' கருதலாம். இரண்டு அணிகளுக்கும் சமமான பலம் (50 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்கள் )

*இந்த ரிசோசர்ஸ்களை அல்லது இரு அணி பலத்தை அடிப்படையாக கொண்டே டார்கெட் முடிவாகிறது. இரண்டு அணிகளின் ரன்கள், ஆடிய மற்றும் ஆட இருக்கும் ஒவர்கள் , எத்தனை விக்கெட்டுகள் இழந்திருக்கிறோம் என்பனவான காரணிகள்.

* இது தவிர டக்வொர்த் மற்றும் லூயிஸ் இணைந்து பல நூறு ,தற்காலத்தில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டங்களின் போக்கை கருத்தில் கொண்டு உருவாக்கிய ( ரன்ரேட், பிட்ச்,அணி பலம்,ஆட்டத்தின் போக்கு etc ) அட்டவணையைக்கொண்டு மேலே கூறிய ரிசோர்ஸ்களை வைத்து டி/எல் முறையில் டார்கெட்டை கண்டறியலாம்.


இதை ஒரு எளிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம்.

A அணியிம் B அணியும் ஆடுகின்றன. A அணி ஆடி முழுமையாக தனது ஆடி முடித்தபின் B அணி பேட்டிங் செய்யும் போது மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் குறைக்கப்படும் , அதே போல ஆடும் நேரமும் குறைக்கப்படும் . இப்படி அவர்களுக்கான ரிசோர்சஸ் (பலம்) குறைக்கப்படும் பட்சத்தில் B அணிக்கு A அணியைவிட குறைந்த டார்கெட் தரப்படும்

A அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடும் போதே மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் மற்றும் ஆடும் நேரமும் குறைக்கப்படும் இல்லையா.. அதனால் அதனை கருத்தில் கொண்டு B அணிக்கு உயரிய டார்கெட் தரப்படும்.


இதை இப்படியும் விளக்கலாம். A அணி ஆடத்துவங்கும் போது 50 ஓவர்கள் என்றே ஆடத்துவங்கும் ஆனால் 40 ஓவர்களில் மழை வந்துவிடுகிறது. அவர்களது கையில் 7 விக்கெட்டுகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மீதியிருக்கும் கடைசி பத்து ஓவர்களில் A அணி ஆடியிருந்தால் நிச்சயம் அவர்களால் 60-75 ரன்கள் வரை சேர்க்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. அவர்கள் ஆடத்துவங்கும் போதும் 40 ஓவரின் போதும் மழையால் இத்தோடு அவர்களது பேட்டிங் முடியப்போகிறது என்பது தெரிந்திருக்காது. அதை கருத்தில் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 40 ஓவர்கள்தான் ஆடப்போகிறோம் என்று தெரிந்தே ஆட இருக்கும் B அணிக்கு அதிக டார்கெட் வழங்கப்படுகிறது.

ஒரு வேளை A அணி 40 வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்திருந்தால், அடுத்த பத்து ஓவர்களில் அதிகபட்சம் 25-30 ரன்களே எடுக்க இயலும் . அதற்கேற்றாற் போல் B அணிக்கு டார்கெட் கிடைக்கும்.

இது பொதுவான ஒரு எடுத்துக்காட்டு. நடைமுறையின் ஒரு துளியே.

இப்படி கணக்கிட டக்வொர்த் மற்றும் லூயிஸ் உருவாக்கிய அட்டவணையை காண்போம். படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம், அல்லது படம் இங்கே




இந்த அட்டவணையானது ஒவ்வொரு ஓவரின் பந்தையும் கணக்கிலெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அது மிகப்பெரிய அட்டவணையாக இருப்பதால் அதிலிருந்து முக்கிய பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய அட்டவணை உருவாக்குவோம்.



மேலுள்ள சுருக்கப்பட்ட மாதிரி அட்டவணைப்படி எப்படிக்கணக்கிடுவது என காண்போம்.

மூன்று சூழ்நிலைகளில் ஒரு போட்டி தடையாகலாம் அல்லது நிறுத்தப்படலாம்.

1.இரண்டாவது பேட்டிங்கின் போது

2.முதல் பேட்டிங்கின் போது

3.ஆட்டம் தொடங்குதற்கு முன்


1.இரண்டாவது பேட்டிங்கின் போது -

A அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்கிறது. B அணி தொடர்ந்து ஆடும் போது, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 80 ரன்கள் எடுக்கிறது. இப்போது மழை வந்தால் எப்படி கணக்கிடுவது எனப்பார்ப்போம்.

*ஆட்டம் நின்றபோது B அணிக்கு 30 ஓவர்களும் 8 விக்கெட்டுகளும் கையில் இருந்தன. எனவே அவர்களிடம் 67.3% பலம் இருந்தன.

*மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக ஆக்கப்பட்டால் , இதே அட்டவணையில் அவர்களது பலம் 57% சதவீதமாக குறையும்.

*மழையால் அவர்களுக்கான இழப்பு 67.3-57.4=14.9%

*இதனால் A அணியைவிட ( 100% சதவீதம் பலம் உபயோகிக்கப்பட்டுள்ளது) B அணிக்கு 85.1% சதவீத பலம் உள்ளது.

*இப்போது A அணியை விட B அணிக்கு பலம் குறைந்திருப்பதால் இப்படி கணக்கிட வேண்டும்.

A அணியின் ஸ்கோர் x B அணியின் பலம் சதவிகிதத்தில்

250 x 85.1/100 = 212.75

எனவே B அணிக்கான டார்கெட் 40 ஓவர்களில் 213 எடுத்தால் வெற்றி என டி/எல் முறையில் நிர்ணயிக்கப்படும்.


2. முதல் பேட்டிங்கிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -

A அணி முதலில் பேட்டிங் செய்கிறது, 30 ஓவர்கள் ஆடிய நிலையில் 143ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையிலிருக்கிறது. இப்போது ஆட்டம் இரு அணிகளுக்குமே 40 ஓவர்கள் என பிரிக்கப்படுகிறது. A அணிக்கு 10 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் எஞ்சியுள்ளன. தொடர்ந்து ஆடி 40 ஓவர்களில் 200 ரன்கள் குவிக்கிறது A அணி.

*மழைக்குறிக்கிட்ட போது A அணிக்கு 20 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் மீதமிருந்தன. இதைக்கொண்டு அதன் பலத்தை டி.எல் அட்டவணை முறையில் கணக்கிட்டால் அவர்களது பலம் 38.6% இருந்தது.

*மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ( ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின் ) அவர்களுக்கு 10 ஓவர்களும் 5விக்கெட்டுகளுமே மீதமிருந்தன. அதை கொண்டு அட்டவணையில் பார்த்தால் 26.1%

*மழையால் A அணியில் பலம் 38.6% - 26.1% = 12.5% சதவீதம் B அணியை விட குறைந்துள்ளது. அதாவது 87.5 சதவீதமே பலம்.

*B அணிக்கு தனது டார்கெட்டும் ஆட இருக்கும் ஓவர்களும் பேட்டிங் செய்யும் முன்பே தெரியுமென்பதால் அவர்களுக்கும் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் 10 விக்கெட்டுகளும் இருப்பதால் அட்டவணைப்படி 89.3% பலம் இருக்கிறது.

*A அணிக்கு ( 89.3% - 87.5% = )1.8% பலம் B அணியை விட குறைவாக இருப்பதால் , B அணிக்கு 1.8% சதவீதம் அதிக டார்கெட் தரப்படும். ஆனால் அது 50 ஓவர்களுக்கு அட்டவணைப்படி கணக்கிடப்பட்டு தரப்படும். அதாவது மழையால் குறைந்த A அணியின் பலம் 12.5% அதைக்கொண்டு கணக்கிட்டால்..

200 x 12.5% = 25 , ஆகவே 200+25 = 225 , இப்போது இந்த ஸ்கோரைக்கொண்டு எத்தனை ரன்கள் B அணிக்கான டார்கெட்டை அதிகமாக்குவதென்று காண்போம்.

225 x 1.8% = 4.5 ரன்கள்

*இப்போது 40 ஓவர்களில் A அணி எடுத்த 200 ரன்களுடன் 4 ரன்களையும் சேர்த்து 204+1 , 205 ரன்கள் பெற்றால் வெற்றி என அறிவிக்கலாம்.


3.ஆட்டம் துவங்குவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -

காலைநேரப்பனி, அல்லது மழை , வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகிறது , அதனால் A அணிக்கு இரு அணிகளுக்கும் 40 ஓவர்கள் நிர்ணயிக்கப்படுகிறது , முதலில் ஆடும் A அணி 38 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது ( ஆல் அவுட்). உணவு இடைவேளையில் மீண்டும் மழை .

B அணிக்கு 30 ஓவர்கள் என நிர்ணயிக்கப்படுகிறது.., இப்போது அந்த அணிக்கு எப்படி டார்கெட் தருவது..

*A அணிக்கு 40 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்ட போது இருந்த பலம்.. அட்டவணைப்படி 89.3% ( 40 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் )

*B அணிக்கு 30 ஓவர்கள் எனக் குறைக்கப்பட்டதும் அவர்களது பலம் அட்டவணைப்படி 75.1% எனக்குறைகிறது. ( 30 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகளுடன் )

*எனவே B அணிக்கு A வைவிட குறைந்த பலமே இருப்பதால் , A வை விட குறைந்த பட்ச டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அது இப்படி கணக்கிடப்படுகிறது

* 160 x 75.1/89.3 = 134.56 , எனவே B அணிக்கு 30 ஓவர்களில் 134+1 எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்படுகிறது.

சரி B அணி இந்த டார்க்கெட்டை நோக்கி விளையாடும் போது 25 ஓவரில் மழை வந்து ஆட்டம் கைவிடப்படும் சூழல் வருகிறது. இப்போது என்ன செய்யலாம் . அந்த நேரத்தில் B அணி 120 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருக்கிறது.

* இப்போது அந்த அணியின் பலம் , 5 ஓவர்களையும் 8 விக்கெட்டுகளையும் இழந்திருப்பதை வைத்து கணக்கிடப்படவேண்டும். அட்டவணைப்படி அதன் பலம் 9.4% . இந்த 9.4% ஆட்டம் கைவிடப்பட்டதால் B அணிக்கு ஏற்பட்ட இழப்பாக கருதலாம்.

*தனது பேட்டிங்கை B அணி துவங்கும் போது அதற்கு 75.1% பலம் இருந்தது. ஆனால் இப்போது அதில் மேலும் 9.4% இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அணியின் பலம் 75.1 - 9.4 = 65.7% மட்டுமே. எனவே முன்னால் கூறியதைப்போல இந்த பலத்தை வைத்து டார்கெட்டை கணக்கிடலாம்

* 160x65.7/89.3 = 117.7 , எனவே 25 ஓவர்களில் B அணி 118 ரன்கள் எடுத்திருந்தாலே அது வெற்றிப்பெற்றதாக கருதலாம். அந்த அணியோ 120/8 என்ற முன்னிலையில் இருப்பதால் , B அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்க இயலும்.


எதிர்பார்க்கப் படும் ஸ்கோர் ( PAR SCORE)-

சிலசமயங்களில் கங்குலி அல்லது தோனி விளையாடும் போது பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டோடு விளையாடுவதை பார்த்திருப்போம். அது ஒரு வேளை சேஸிங் செய்யும் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மழை வரும் என எதிர்பார்க்கையில் டி/எல் முறைப்படி 30வது ஓவரில் மழைவர நேர்ந்தால் எடுத்திருக்க வேண்டிய ஸ்கோர் 35 என்றால் ஒன்று 40 என்றால் ஒன்று என கணக்கிட்டு வைத்துக்கொள்ளுதல். இதை PAR Score என அழைக்கிறார்கள். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு எளிதாக இருக்கும்.

சமீபகாலமாக மென்பொருள் துறையின் எழுச்சியும் வளர்ச்சியும் இம்முறையை ஒரு சிறிய தட்டச்சுகளில் எளிதாக்கியிருக்கிறது.

http://www.duckworth-lewis.com/Calculator/tabid/72/Default.aspx

என்கிற இந்த இணையதளத்தில் யார்வேண்டுமானாலும் கணக்கிடலாம்.

மாறி வரும் உலக அதிகார மையம்

குறைந்து வரும் மக்கள் தொகை வளர்ச்சி
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய எட்டு நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு ஜி-8. இது வளர்ச்சியடைந்த, தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பு. இது நாள் வரை உலக பொருளாதாரத்திலும், அரசியலிலும் இந்த நாடுகளே கோலோச்சி வந்தன. ஆனால் தற்போது உலகம் முழுவதும் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி இந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிவிடும் என்றே தோன்றுகிறது. காரணம் ரஷ்யா தவிர்த்த ஏனைய நாடுகளின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேநேரம் அந்நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சியோ குறைந்து கொண்டே போகிறது.

ஆனால் இதற்கு நேர்மாறாக பிரிக் கூட்டமைப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் இந்த 21ம் நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேவேளையில் இவற்றின் கடன்சுமையும் குறைந்து வருகிறது. இந்நாடுகளில் ரஷ்யா தவிர்த்த ஏனைய மூன்று நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ச்சியும் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. இது அந்நாடுகளின் மிகப்பெரிய பலமாகவும், அந்நாடுகளின் எதிர்காலத்தை கட்டியமைக்கும் சக்தியாகவும் கருதப்படுகிறது. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, முதல் உலகப்போருக்கு (1914) முன்பாக ஜெர்மனியில் ஏற்பட்ட வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கமே. இதே காரணத்திற்காக தான் முதல் உலகப்போரின் விளைவாக சீர்குலைந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 1930களுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவித்தார்.

மக்கள் தொகை வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்படுகின்ற வேளையில் இங்கே மக்கள் தொகை வளர்ச்சியை பலம் என்று கூறுவது நம்மில் பலருக்கு சந்தேகத்தை எழுப்பும். மக்கள் தொகை வளர்ச்சியின் விளைவாக இந்நாடுகளில் உழைக்கும் நிலையில் உள்ளோர் குறிப்பாக இளைஞர்கள் இந்நாடுகளில் அதிகம். இளைஞர்கள் அதிகமாக இருப்பது ஒரு நாட்டின் பலம் தானே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலோ நிலைமை நேர்மாறாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவதோடு, மருத்துவ மேம்பாட்டினால் அந்நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, அதுவே பெரும் சுமையாக மாறி வருகிறது. ஆகவே பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டமிடலில் மிகப்பெரிய தடை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து ஏராளமான மக்கள் அமெரிக்காவில் குடியேறியதன் விளைவாக ஏற்பட்ட உழைக்கும் திறன் குறைபாட்டால் தான் கிபி 1873ம் ஆண்டு பிரிட்டனில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கழுத்தை நெரிக்கும் கடன் சுமை
ரஷ்யா தவிர்த்த ஏனைய ஜி-8 நாடுகளின் கடன் சுமை அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கில் கொள்ளும் போது மிகவும் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் பொருளாதார வல்லரசான அமெரிக்காவிற்கு 80%ம், ஜெர்மனிக்கு 77%ம், இத்தாலிக்கு 100%ம், ஜப்பானுக்கு 199%ம் கடன் சுமை உள்ளது. இதை விட அதிகமாக உலகில் ஜிம்பாப்வேக்கு மட்டுமே கடன் (218%) உள்ளது. அமெரிக்காவின் கடன் சுமை கடந்த செப்டம்பர் 2008க்கு பிறகு மட்டுமே 60%லிருந்து 80%ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் வளரும் நாடுகளில் இந்தியா மட்டுமே அதிக கடன் சுமை (58%) கொண்ட நாடாக உள்ளது. எதிர்கால பொருளாதார வல்லரசாக கருதப்படும் சீனாவின் கடன் சுமை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18%ஆக உள்ளது. பிரேசில் நாட்டின் கடன் சுமை 45%ஆகவும், இந்தோனேஷியாவின் கடன் சுமை 34%ஆகவும், தென்கொரியாவின் கடன் சுமை 28%ஆகவும் உள்ளது. சமீபத்திய பெட்ரோல் விலையேற்றத்தால் பெரிதும் லாபமடைந்த ரஷ்யா தனது கடன்களில் பெருமளவு அடைத்து விட்டது. அதன் தற்போதைய கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6% மட்டுமே.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம்
பெருகி வரும் கடன்சுமை, குறைந்து வரும் மக்கள் தொகை ஆகிய இரட்டை தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள ரஷ்யா தவிர்த்த ஏனைய ஜி&8 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடந்த 18 மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 6.1%ம், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 9.6%ம், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 15%ம் குறைந்துள்ளது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கார்களின் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.2% அதிகம். இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் சில்லறை விற்பனை 15% அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7 அல்லது 8 சதவீத அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்தியாவில் 6%மாகவும், இந்தோனேஷியாவில் 4%மாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்த ஆண்டு அமெரிக்காவின் பட்ஜெட்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% அளவிற்கு பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை சீனாவிலோ 3%க்கும் குறைவாக மட்டுமே பற்றாக்குறை இருக்கும். பிரேசில் நாட்டிலோ பட்ஜெட்டில் உபரி நிதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக் உச்சிமாநாடு
இந்நிலையில் ரஷ்யாவின் யாகடரின்பர்க் நகரில் ஜுன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மற்றும் பிரிக் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கூட்டத்தில் நடப்பு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் பெருகி வரும் அமெரிக்காவின் கடன் சுமையையும், அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியையும் கருத்தில் கொண்டு டாலரின் பயன்பாட்டினை குறைத்துக் கொள்வது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் சுமார் 2 டரில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ள சீனா தற்போது தனது சேமிப்புகளை பல்வேறு வகைகளில் மாற்ற முயற்சிக்கிறது. முதல் கட்டமாக டாலருக்கு பதிலாக தனது நாணயமான யுவானிலேயே விலை நிர்ணயம் செய்ய பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்கு முன்னதாக மலேசியாவுடனும் இதேமாதிரியான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

உலகை சுற்றிலும் ராணுவ தளங்களை ஏற்படுத்தி, அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் அமெரிக்காவின் வலிமையான பொருளாதாரத்திற்கு முதுகெலும்பே அதன் நாணயமான டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்து தான். இதன் மூலமாக தான் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய நுகர்வோராக இருப்பது என்பதை ஏற்கனவே நமது முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம். தங்களை அச்சுறுத்தி வரும் அமெரிக்காவின் ராணுவ மேலாண்மையை தகர்க்கும் பொருட்டு, டாலரின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவது என ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளன. அதாவது தங்களிடையேயான வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது என அவை தீர்மானித்துள்ளன.

எந்தவொரு நாட்டையும் சாராத, தன்னிச்சையாக செயல்படும் உலக நிதி ஆணையம் மூலம் சர்வதேச வணிகத்திற்கான பொது நாணயம் வெளியிடப்பட்டு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து பிரிக் நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்ட, மிகவும் வேகமாக வளரும், எதிர்கால பொருளாதார வல்லரசுகளாக கருதப்படும் பிரிக் நாடுகள் டாலரின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவது என தீர்மானித்தால் அதுவே இந்த நூற்றாண்டில் உலக அரசியலில் ஏற்படும் மிகப்பெரிய திருப்பமாக இருக்கும். ஏனெனில் அந்த முடிவு அமெரிக்காவை மையமாக கொண்ட தற்போதைய உலக பொருளாதார கட்டமைப்பை உடைப்பதாக அமையும். மேலும் அது அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்திற்கு முடிவுரை எழுதுவதாகவும் இருக்கும்.

விசித்திர விஞ்ஞானம் நீ...


விஞ்ஞானத்தால்
மாற்றங்கள் நிகழ்வதுண்டு...
ஆனால்
எனக்குள்
மாற்றங்கள் நிகழ்த்தும்
விசித்திரமான
விஞ்ஞானமே நீ தான்!

வானொலியும்
தொலைக்காட்சியும்
இயங்குவது
மின்காந்த அலையால்...
வாலிபன் நான் மயங்கியது
உன் காந்தவிழியால்!

புவியின் ஈர்ப்பாலேயே
பொருட்கள் விழுகிறதாம்...
நான்
உன் புன்னகையின்
ஈர்ப்பாலல்லவா
காதலில் வீழ்ந்தேன்!

வலைப்பின்னலில்
உலகமே
சிக்கிக் கிடக்க...
உன்
ஜடைப்பின்னலில்
சிக்கிக் கொண்டவர்கள்
நானும் பூக்களும் தான்!

பூமியில்...
ஒரு பங்கு தரை
மூன்று பங்கு நீர்!
தண்ணீரில்...
இருபங்கு ஹைட்ரஜன்
ஒரு பங்கு ஆக்ஸிஜன்...
காற்றில்...
நைட்ரஜனும்
ஆக்ஸிஜனுமே
பெரும்பங்கு!

என்னவளே!
எட்டிப்பார்
என் இதயத்தை...
நீதான்
அங்கு முழுப்பங்கு!

நிலவில்...
காற்றில்லை
என்
நினைவில்
நீ இல்லாமல் இல்லை!

தனித்தனியாய்
பிரிக்கக் கூடியதுதான்
கலவை...
பிரியமானவளே!
நீயும் நானும்
பிரிக்கவே முடியாத
சேர்மமாக
சேர்ந்துவிடக் கூடாதா
என்பதே
என் கவலை!

பூமி கூட
தன்னைத்தானே
சுற்றிக் கொண்டு
சூரியனையும் சுற்றுகிறதடி...
ஆனால்
நான்
உன்னைத்தானே
சுற்றுகிறேன்!

என் பூமியே
என்னைப் புறக்கணிக்காதே!
அப்புறம்
அதனால் ஏற்படும்
அதிர்வுகளை அளவிட
உன்னிடம்
அளவுகோல் இல்லை...


.........................................................படித்ததில் பிடித்தது

மனிதன் நிலவில் குடியேறுவது எப்போது?



ஜூலை 21, 1969...

இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பொன்னாள். ஆம். அன்று தான் நிலவில் முதன் முதலாக மனிதன் தன் காலடியை பதித்தான். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய அப்பல்லோ&11 என்ற விண்கலத்தில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி, தங்கள் நாட்டு கொடியை நட்டு வந்தனர். இந்த நிகழ்வு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்வும், 1968ம் ஆண்டு வெளிவந்த, விண்வெளி பயணத்தை கருப்பொருளாக கொண்ட "2001 A Space Odessey" என்ற திரைப்படமும் மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆவலையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தின. இதை தொடர்ந்து பல சர்வதேச நிறுவனங்கள் நிலவிலே சுற்றுப்பயணம் மேற்கொள்வது, நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுவது என்று வணிக ரீதியிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து, மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தின.

நாசாவும், சோவியத் யூனினும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ச்சியாக நிலவிற்கு விண்வெளி கலங்களை அனுப்பி, அங்கு மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வந்தன. நமது பாரதம் வரும் 2011ம் ஆண்டு நிலவிற்கு விண்வெளிக்கலம் அனுப்பும் சந்திரயான் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. இவ்வாறாக சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிலவை ஆய்வு செய்ய கிளம்பியுள்ளன. அதுசரி. நிலவில் மனிதன் கால்பதித்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், மீண்டும் மனிதனை நிலவிற்கு அனுப்பவில்லை? அல்லது நிலவிலே மனிதன் குடியேறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு தானே.

முதலில் மனிதன் உயிர்வாழ தேவையானவற்றையும் அவை நிலவிலே கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் ஆய்வு செய்வோம்.

மனிதன் உயிர்வாழ பின்வருவன மிகவும் அவசியம்.

1. சுவாசிக்க காற்று (ஆக்ஸிஜன்)
2. நீர்
3. உண்ண உணவு
4. காற்று நிரப்பப்பட்ட அறைகள்
5. ஆற்றல்

ஆக்ஸிஜன்
பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி நிலவின் மண்ணில் ஆக்ஸிஜன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜனை வெப்பம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கலாம். ஆகவே நிலவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை.

நீர்
நாசா அண்மையில் அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்தபோது நிலவின் தென்பகுதியில் நீரானது பனிப்பாறைகளாக உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் நிலவில் மனிதனுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் தீர்ந்துவிடும். மேலும் இந்த நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளாக தனித்தனியே பிரித்தெடுத்து, ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை நிலவில் நீர் இல்லையெனில் நாம் பூமியிலிருந்து தான் நீரை நிலவிற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம். ஏனெனில் ஒரு பவுண்ட் எடையுள்ள பொருளை பூமியிலிருந்து நிலவிற்கு கொண்டு செல்ல சுமார் 50ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். ஆகவே கேலன் (8 பவுண்ட்) நீரை நிலவிற்கு கொண்டு செல்ல கிட்டத்தட்ட 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இதற்கு மாற்றாக பூமியிலிருந்து நிலவிற்கு திரவ ஹைட்ரஜனை கொண்டு செல்லலாம். ஒரு நீர் மூலக்கூறில் 67% ஆக்ஸிஜனும், 33% ஹைட்ரஜனும் உள்ளது நமக்கு தெரியும். ஆகவே நிலவில் தாராளமாக கிடைக்கும் ஆக்ஸிஜனுடன் திரவ ஹைட்ரஜனை வினைபுரிய செய்து நமக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த வினைவயின் போது நமக்கு மின்சக்தியும் கிடைக்கிறது.

உணவு
மனிதன் உயிர்வாழ தேவையான மற்றொன்று உணவு. ஒவ்வொரு மனிதனும் ஆண்டொன்றுக்கு 450 பவுண்ட் எடையுள்ள உணவை உட்கொள்கிறான். புவியில் நிலவும் உணவுச்சங்கிலியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு தேவையான உணவை முதல் நிலை ஆற்றல் உற்பத்தியாளர்களான தாவரங்களிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன. புவியின் வளிமண்டலத்திலுள்ள கார்பனும், நைட்ரஜனும், மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஜீவாதாரமான தாவங்கள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.




புவியின் ஈர்ப்புவிசையை காட்டிலும் நிலவின் ஈர்ப்புவிசை 6 மடங்கு குறைவு. இதனால் நிலவால் வளிமண்டலத்தை ஈர்த்து வைத்திருக்க முடியவில்லை. அதாவது நிலவில் வளிமண்டலம் இல்லை. அதுபோல் நிலவின் மண்ணில் தாவரங்கள் ஏதுவான தாதுஉப்புகளும் இல்லை. ஆகவே இந்த வேதிப்பொருட்களை புவியிலிருந்து தான் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. எனினும் இவற்றை நாம் ஒருமுறை மட்டும் கொண்டு சென்றால் போதும். உணவு தயாரிக்க மூலப்பொருட்களான வேதிப்பொருட்களையோ அல்லது நேரடியாக உணவையோ நிலவிற்கு கொண்டு சென்று விட்டால், பின்னர் மனிதனின் திட, திரவ, வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கழிவுகளிலிருந்து, அதாவது இவற்றிலிருந்து தாவரங்கள் வளர தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதாவது நமது கழிவுப்பொருட்களே நமது உணவிற்கான ஆதாரப்பொருட்களாகின்றன. இதன் மூலம் உணவுச்சங்கிலி தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கும்.

வசிப்பிடம்
காற்று நிரப்பப்பட்ட, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகள் மனிதன் வாழ அவசியமாகிறது. தொடர்ந்து நடந்து வரும் ஆய்வுகளின் பலனாக செராமிக்ஸ் மற்றும் உலோகங்களை பயன்படுத்தி அத்தகைய அறைகளை நிலவில் நிர்மாணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

ஆற்றல்
நிலவிலே ஆற்றலை பெறுவது மனிதனுக்கு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. சூரியனிலிருந்து ஆற்றலை பெற்றுக் கொள்ளலாம் என்றால், நிலவில் சூரிய ஒளி ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே கிடைக்கும். ஆகவே அது தவிர்த்து பிற நேரங்களில் ஆற்றலை பெறுவது சிக்கலாகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக நாம் ஏற்கனவே பார்த்தபடி திரவ ஹைட்ரஜனையும், நிலவின் மண்ணிலிருந்து பெறும் ஆக்ஸிஜனையும் வினைபுரியச் செய்து நீரை தயாரிக்கும் போது, நாம் பகுதி விளைவாக மின்சக்தியை பெறலாம். இதன் மூலம் நமது ஆற்றல் தேவையை ஈடுசெய்யலாம். மாற்று ஏற்பாடாக நிலவில் அதிகமாக கிடைக்கும் யுரேனிய படிவுகளை பயன்படுத்தி அணுஆற்றல் தயாரிக்கும் திட்டமும் உள்ளது.

நிலவில் மனிதன் குடியேறாமைக்கான காரணங்கள்

நிலவிலே குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் இருந்தும், மனிதன் ஏன் இன்னும் குடியேறவில்லை என்பது நம் முன் எழும் மிகப்பெரிய கேள்வி. அதற்கான விரிவான விளக்கத்தை பார்ப்போம்.

சுமார் 100 பேர் கொண்ட மனித குடியேற்றத்தை நிலவிலே ஏற்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தனி மனிதனையும், அவன் உயிர்வாழ தேவையான அடிப்படை பொருட்களையும் நிலவிற்கு எடுத்து செல்ல ஆகும் செலவுகளை முதலில் கணக்கிடுவோம்.
1. மனிதனின் எடை - 200 பவுண்ட்
2. வேதிப்பொருட்கள் (உணவு தயாரிக்க) - 500 பவுண்ட்
3. வசிப்பிடம் உருவாக்க தேவையான மூலப்பொருட்கள் - 1000 பவுண்ட்
4. உணவு மற்றும் வசிப்பிடத்தை உருவாக்க தேவையான பொருட்கள் - 1000 பவுண்ட்

ஆக ஒரு தனிமனிதனை நிலவிலே குடியேற்ற சுமார் 3000 பவுண்ட் எடையை நிலவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படியானால் 100 பேர் கொண்ட குடியேற்றத்தை உருவாக்க மூன்று லட்சம் பவுண்ட் எடையை நிலவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போது ஒரு பவுண்ட் எடையை பூமியிலிருந்து நிலவிற்கு எடுத்துச் செல்ல 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வீதம், மூன்று லட்சம் பவுண்ட் எடையை நிலவிற்கு எடுத்து செல்ல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இது பூமியிலிருந்து நிலவிற்கு எடையை கொண்டு செல்ல ஆகும் செலவு மட்டுமே. மேலும் அவற்றின் உருவாக்கம், வளர்ச்சி, மூலப்பொருட்களின் விலை, மக்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் நிர்வாக செலவுகள் என அனைத்தையும் கூட்டி பார்த்தால் அது நூற்றுக்கணக்கான பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தொட்டுவிடும். இப்போது புரிகிறதா நிலவிலே ஏன் இன்னும் மனிதனின் குடியேற்றம் அரங்கேறவில்லை என்று.

நிலவு ஆராய்ச்சி - அடுத்த கட்டம்
நிலவை ஆய்வு செய்யும் தனது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிலவில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது மற்றும் மனிதனை குடியேற்றுவது குறித்த கால அட்டவணையை தொகுத்து, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு நிலவிற்கு நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பி, அதற்கான முன்னேற்பாடுகளை துவக்க உள்ளது. நாசாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுமாயின், நிலவிலே மனிதன் விரைவில் குடியேறிவிடுவான்.
இன்று ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் விண்ணில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளும் மனிதன் நிலவிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் நாள் விரைவில் இல்லை. நிலவில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் மனிதன் பின்னர் தன் நிரந்தர குடியேற்றத்தையும் ஏற்படுத்துவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் இன்று நடக்க இயலாதது தான் நாளை சாத்தியமாகிறது. அதுவே பின்னர் வரலாறாகிறது. ஆகவே நிலவிலே காலடி பதித்துவிட்ட நாம் விரைவில் நிலவில் நமது குடியேற்றங்களை நிறுவுவோம். விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் புதுமைகள் பல படைப்போம்.

பறக்கும் ஹோட்டல்



ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வானில் பறக்கப் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள "ஹோட்டலிகாப்டர்" என்று பெயரிடப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தான் அந்த பெருமையை பெற போகிறது. இது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பறப்பது போன்ற பரவச நிலையை ஏற்படுத்தப் போவது நிச்சயம்.

இந்த ஹெலிகாப்டரில் 8 பிரம்மாண்டமான ஆடம்பர அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அறைகள் ஒவ்வொன்றும் உயர் ரக படுக்கைகள், லினென் துணிகள், மினிபார், காபி மேக்கர், வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்பு என ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. இந்த ஹெலிகாப்டரின் அறைகள் அனைத்தும் ஒலி உட்புகாத் தன்மை (Sound Proof) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் புறப்பட்டதில் இருந்து அது தரையிறங்கும் வரை ஒரு மணிக்கொரு முறை ரூம்சர்வீஸ் முறையும் கடைபிடிக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் செய்யப்பட்டுள்ளன.

சோவியத் யூனியனின் தயாரிப்பான MI V-12 ஹெலிகாப்டரை மாடலாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஏனெனில் வடிவம், திறன் உள்ளிட்ட பலவகைகளில் MI V-12 -ஐ ஹோட்டலிகாப்டர் ஒத்துள்ளது. இது 42மீ (137அடி) நீளமுடையது. இதன் உயரம் 28மீ (91அடி). இது அதிகபட்சமாக 1,05,850கிகி எடையை தாங்கக் கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 255கிமீ வேகத்திற்கு செல்லக்கூடியது. ஆனால் மணிக்கு 237கிமீ வேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன தொலை தொடர்பு கருவிகள் மூலம் 515 கிமீ தூரம் வரை தொடர்பு கொள்ள முடியும். ஆனால் 1296கிமீ தூரம் வரை தொடர்பு கொள்ளும் வகையில் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கன்னிப்பயணம் வரும் ஜுன் 26ம் தேதி நியூயார்க் நகரின் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. தொடக்க கோடை சுற்றுப்பயணம் ஜுலை 10ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. அடுத்ததாக ஜுலை 17ம் தேதி மீண்டும் 14 நாள் சுற்றுப்பயணமாக கலிபோர்னியா செல்கிறது. பின்னர் 16 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜுலை மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஜமைக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது.

இந்த சுற்றுப்பயணங்களுக்கான முன்பதிவு இப்போதே துவங்கிவிட்டது. இதற்கான கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் மிக அதிகமாகவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு என்றவுடன் நம்மில் சிலர் அதனால் வாயுத்தொல்லை ஏற்படும் என்று கூறுவர். ஆனாலும் உருளைக்கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு பொறியல், குழம்பு, குருமா, சாலட் என உணவாகவும், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் வடஇந்தியாவில் உருளைக்கிழங்கு தினசரி உணவாகவே பயன்படுகிறது. அங்கு உருளைக்கிழங்கு மக்களின் அன்றாட உணவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது எனலாம். இவ்வாறு உலகம் முழுவதும் மக்கள் விரும்பி உட்கொள்ளும் முக்கிய உணவுப்பொருட்களுள் ஒன்றாக உருளைக்கிழங்கு மாறிவிட்டது. நெல், கோதுமை, சோளம் இவற்றிற்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு உலகெங்கிலும் பரவலாக பயிரிடப்படுகிறது. உலகின் பல நாடுகளுக்கு அன்னிய செலாவணி ஈட்டித்தரும் முக்கிய பணப்பயிராகவும் இது விளங்குகிறது. மனிதனின் நல்வாழ்விற்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உருளைக்கிழங்கு பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பில் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது.

அறிமுகம்
உருளைக்கிழங்கு என்பது "சொலானம் டியூபரோசம்" என்ற தாவரத்தின் வேரிலிருந்து பெறப்படும், சமையலுக்கு பயன்படும் ஒருவகை கிழங்கே. இது நிழற்செடி வகையைச் சேர்ந்தது. இதன் இனப்பெருக்கம் விதைகள் மூலம் நடைபெறாது. மாறாக கிழங்கின் கணுப்பகுதின் மூலமாகவே நடைபெறுகிறது. உருளைக்கிழங்கின் சிறப்பம்சம் யாதெனில், வேக வைக்கப்பட்ட பின்னரும் கூட இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெருமளவு தக்க வைக்கப்படுவதே. அதாவது மற்ற காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் போல, சமைத்த பிறகு உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துகள் இழக்கப்படுவதில்லை. அவை அதற்குள்ளாகவே தங்கி விடுகின்றன. ஆகவே உருளைக்கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் மிகவும் சத்தானவை என்பதில் ஐயமில்லை. ஆகவே அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி உருளைக்கிழங்கு உணவுகளை ஒரு கை பார்க்கலாம்.

பரவல்
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாடே உருளைக்கிழங்கின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து கி.பி.1536ம் ஆண்டு ஐரோப்பாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் ஐரோப்பிய கடல் பயணிகளால் ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. 16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடல் பயணிகள் உருளைக்கிழங்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினர். பின்னர் 17ம் நூற்றாண்டில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதிகள் மற்றும் சீனாவிலும், 18ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் உருளைக்கிழங்கு அறிமுகமானது. இவ்வாறாக இன்று உருளைக்கிழங்கு உலகின் பெருவாரியான நாடுகளில் பயிரிடப்படுகிறது.
உலக வேளாண் நிறுவனத்தின் கணக்கீடுகளின் படி, கடந்த 2006ம் ஆண்டு உலகளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி 315 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் நான்கில் ஒரு பகுதி, அதாவது சுமார் 79 மில்லியன் மெட்ரிக் டன்கள் சீனாவின் பங்களிப்பே. அதற்கு அடுத்தபடியாக 39 மில்லியன் மெட்ரிக் டன்களுடன் ரஷ்யா இரண்டாமிடத்திலும், 25 மில்லியன் மெட்ரிக் டன்கள் விளைவித்து இந்தியா மூன்றாமிடத்திலும் தொடர்கின்றன.

முக்கியத்துவம்
மனிதனின் முக்கிய உணவுப்பொருளாக மாறிவிட்ட உருளைக்கிழங்கு இன்று, மனிதனின் அன்றாட தேவைகளுள் ஒன்றாகிவிட்டது என்றால் மிகையாகாது. இன்று மனிதன் விரும்பி உட்கொள்ளும் பெரும்பாலான உணவுப்பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கிறது.
கி.பி.1845ம் ஆண்டு ஐரோப்பாவின் மேற்கு அயர்லாந்து பகுதியில் ஏற்பட்ட பெரும் உணவுப்பஞ்சம் உருளைக்கிழங்கின் முக்கியத்துவத்திற்கு கட்டியம் கூறும். அச்சமயத்தில் பரவிய ஒருவித கொள்ளைநோயால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு செடிகள் யாவும் பாதிக்கப்பட்டன. இதனால் உருளைக்கிழங்கின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் உணவுப்பஞ்சமே ஏற்பட்டது. இதிலிருந்து உருளைக்கிழங்கு மக்களின் அன்றாட உணவுப்பொருளாக விளங்கி வருவது தெளிவாகிறது.
வளர்ந்து வரும் உலக உணவுத்தேவையை கருத்தில் கொண்டு, கடந்த 2008ம் ஆண்டை சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக ஐநா அறிவித்தது. மனித வாழ்வில் உருளைக்கிழங்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஐநா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. உருளைக்கிழங்கு "மறைந்துள்ள பொக்கிஷம்" என்று அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங் கிற்கான சர்வதேச மையம் ஒன்று பெரு நாட்டின் தலைநகர் "லிமா" நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வேகவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கும் பருப்பும் சேர்ந்த கலவையே மனிதன் தன் குழந்தை பருவத்தில் முதன் முதலில் சாப்பிடும் திடஉணவாக திகழ்கிறது. உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளதால் தான் பள்ளிகளில் பயறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சத்துணவுகளுடன் வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கை அனைத்து வளர் இளம் பருவத்தினருக்கும் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊட்டச்சத்துகள்
உருளைக்கிழங்கில் விட்டமின் "ஏ" தவிர்த்து, கிட்டத்தட்ட மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அதேநேரம் இதில் கொலஸ்டிரால் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் ஏற்றது. உடலின் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதிலும் உருளைக்கிழங்கு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும் நெல், கோதுமை, சோளம் போன்ற பிற உணவுப்பொருட்களை ஒப்பிடும் போது உருளைக்கிழங்கில் தான் அதிக அளவு கலோரி உள்ளது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் பெறப்படும் உருளைக்கிழங்கு 9.2 மில்லியன் கலோரிகளை தருகிறது. ஆனால் அதேஅளவு நிலத்தில் இருந்து பெறப்படும் அரிசியிலிருந்து 7.4 மில்லியன் கலோரிகளும், கோதுமையிலிருந்து 3 மில்லியன் கலோரிகளும், சோளத்திலிருந்து 7.5 மில்லியன் கலோரிகளும் மட்டுமே பெற முடியும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கில் 75%க்கம் அதிகமாக நீர் மூலக்கூறுகளே வியாபித்துள்ளன. அதன் திட மூலக்கூறுகளில் பெரும்பகுதி மனிதனின் இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கும் மாவுப்பொருளான கார்போஹைட்ரேட் தான். உருளைக்கிழங்கின் வெளித்தோலுக்கு அடியில் மஞ்சள் நிற படிவமாக புரோட்டின் காணப்படுகிறது. மேலும் மனிதனுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துகளும் உருளைக்கிழங்கில் அடங்கியுள்ளன.





புதிதாக அறுவடை செய்யப்பட்ட, தோலுடன் கூடிய, சுமார் 100கி எடையுடைய உருளைக்கிழங்கில் ஏறத்தாழ 75கி அளவிற்கு நீர் மூலக்கூறுகளே நிறைந்துள்ளன. இதில் கார்போஹைட்ரேட் 19 கிராமும், புரோட்டீன் 2 கிராமும், கொழுப்பு 0.1 கிராமும் உள்ளன. மேலும் இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகளும், அவற்றின் அளவுகளும், மனிதனின் அன்றாட தேவையில் (Daily Value ) அவற்றின் பங்களிப்பும் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து அளவு Daily Value (in Percentage)


தையமின் (வைட்டமின் பி1) 0.08 மிகி 6%
ரைபோபிளேவின் (வைட்டமின் பி2) 0.03 மிகி 2%
நியாசின் (வைட்டமின் பி3) 1.10 மிகி 7%
வைட்டமின் பி6 0.025 மிகி 19%
வைட்டமின் சி 20 மிகி 33%
கால்சியம் 12 மிகி 1%
இரும்பு 1.8 மிகி 14%
மெக்னீசியம் 23 மிகி 6%
பாஸ்பரஸ் 57 மிகி 8%
பொட்டாசியம் 421 மிகி 9%
சோடியம் 6 மிகி 0%

சேமித்தல்
நீர்மூலக்கூறுகள் அறவே இல்லாத, குறைந்த வெப்பநிலையுடைய, சூரிய வெளிச்சமற்ற, நன்கு காற்றோட்டமான அறைகளில் தான் உருளைக்கிழங்கை சேமித்து வைக்க வேண்டும். ஏனெனில் நீருடன் சேரும் போது உருளைக்கிழங்குகள் அழுகிவிடும் அபாயம் உள்ளது. உருளைக்கிழங்கின் மீது சூரியஒளி படும் போது, அது விஷத்தன்மையுடைய "சொலானின்" உருவாக காரணமாகிறது. அதேநேரம் உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் சேர்த்தும் சேமித்து வைக்க கூடாது. அவ்வாறிருப்பின் உருளைக்கிழங்கு சீக்கிரமாகவே கெட்டுவிடும். உருளைக்கிழங்கு சேமிப்பதில் இருக்கும் பல்வேறு சிரமங்களினாலும், உலக நாடுகள் அனைத்திலுமே இது விருப்பமான உணவுப்பொருளாக இருப்பதாலும் உலகில் விளையும் உருளைக்கிழங்கில் சுமார் 5% மட்டுமே உலகளவிலான வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சமையலில் உருளைக்கிழங்கு
பல்வேறு உணவு வகைகள் தயாரிப்பதில் உருளைக்கிழங்கு முக்கிய பகுதி பொருளாக பயன்படுகிறது. பெரும்பாலும் உருளைக்கிழங்கை வேகவைத்து வெளித்தோலை உரித்துவிட்டோ அல்லது தோலுடனேயோ பயன்படுத்துகின்றனர். உருளைக்கிழங்கை முழுமையாகவோ அல்லது சிறுசிறு துண்டுகளாகவோ சமையலில் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான உருளைக்கிழங்கு உணவு வகைகள் சூடாகவே பரிமாறப்படுகின்றன. சில உணவுப்பொருட்கள் மட்டுமே சமைத்து, ஆற வைக்கப்பட்ட பின்னர் பரிமாறப்படுகின்றன. அதற்கு உதாரணம் சாலட் மற்றும் சிப்ஸ் வகைகள். மற்றவற்றுடன் ஒப்பிடும் போது உருளைக்கிழங்கை சமைப்பது எளிது. உருளைக்கிழங்கின் வகையையும், அளவையும் பொறுத்து அதை வேகவைக்க சுமார் 10 முதல் 25 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும்.

உணவு வகைகள்

லத்தீன் அமெரிக்கா
பாப்பா ஆ லா ஹாங்கைனா, பாப்பா ரீலேனா, ஓகோபா, காரா பல்கரா போன்ற உலகப்புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க உணவு வகைகளுக்கு முக்கிய பகுதிப்பொருளே உருளைக்கிழங்கு தான். பெரும்பாலும் உருளைக்கிழங்கை வேகவைத்து, கூழாக்கிய பின்னரே பயன்படுத்துகின்றனர். சிலி நாட்டில் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யப்படும் "சிலாக் ஆர்கியலகா" என்ற உணவு மிகவும் பிரபலம்.

வடஅமெரிக்கா
"பிரெஞ்சு பிரைஸ்" மற்றும் "ஹாஷ் பிரௌன்ஸ்" போன்ற உருளைக்கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் அமெரிக்காவின் எல்லா உணவு விடுதிகளிலும், துரித உணவகங்களிலும் தாராளமாக கிடைக்கும். "சால்ட் பொட்டட்டோ" என்ற உணவு நியூயார்க்கில் மிகவும் பிரபலம். உருளைக்கிழங்கை நீர் சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் உப்பு சேர்த்து, நெய்யுடன் பறிமாறப்படும் உணவே இது. இதன் தன்னிகரில்லா சுவையால் இது நியூயார்க் நகர உணவகங்களில் தனக்கென தனியிடத்தை பெற்றுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற ஹனூக்கா திருவிழாவின் போது அமெரிக்காவில் உள்ள யூதர்கள் "லேட்கீஸ்" எனப்படும் பொறித்த உருளைக்கிழங்கு பான்கேக்குகளை உண்பதையே பாரம்பரிய வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

ஐரோப்பா
இங்கிலாந்தில் வேகவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கும் மீன் உணவும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. சிப்ஸ்களாகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற "சன்டே ரோஸ்ட்" என்ற உணவில் பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் "ஷெப்பர்டு பீ", "பபுள் அன்ட் ஸ்குவாக்" ªன்ற உணவு வகைகளின் தயாரிப்பிலும் உருளைக்கிழங்கே பிரதானம். "பபுள் அன்ட் ஸ்குவாக்" முன்னர் இறைச்சி சேர்ந்த அசைவ உணவாகவே பரிமாறப்பட்டது. ஆனால் தற்போது அது வெறும் காய்கறிகளின் கலவையாக, சைவ உணவாகவே பரவலாக மாறிவிட்டது. அயர்லாந்து நாட்டில் வேகவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கையும், முட்டைக்கோசையும் பிரதானமாக கொண்டு தயாரிக்கப்படும் "அயர்லாந்து கல்கனான்" என்ற உணவு அந்நாட்டு மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுகிது. வேகவைத்த உருளைக்கிழங்குடன் மாவு, நெய், வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் "போன்சே பான்கேக்" உலக அளவில் பிரபலமானவை.
"பிரின்ட்சோவ், ஹாலூஸ்கி" போன்ற உணவு வகைகள் ஸ்லோவாக்கியா நாட்டில் மிகவும் பிரபலமானது. உருளைக்கிழங்குடன் மாவு சேர்த்து, கொதிக்க வைத்து, பின்னர் அதனுடன் ஸ்லோவாக்கியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகள், ரஷியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன் போன்ற நாடுகளில் உருளைக்கிழங்கை முழுமையாக வேகவைத்து, பின்னர் ஒருவித மூலிகைப்பொருட்களுடன் சேர்த்து உணவாக பயன்படுத்துகின்றனர்.
மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக பெல்ஜியம் நாட்டில் "பிரெஞ்சு பிரைடு பொட்டட்டோ" உணவு மிகவும் பிரபலம். இது உருளைக்கிழங்கை வேகவைத்து, சிறுசிறு துண்டுகளாக்கி பொறித்து தயாரிக்கப்படுகிறது. "ஸ்டம்பார்டு" என்பது புகழ்பெற்ற ஹாலந்து உணவு வகை. இதில் உருளைக்கிழங்குடன் பல்வேறு காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
"ஹச்சிஸ் பெர்மெண்டியர்" என்ற உருளைக்கிழங்கை பிரதானமாக கொண்டு தயாரிக்கப்படும் உணவு பிரான்ஸ் நாட்டில் மிகவும் பிரபலமானது. பிரான்சின் மத்திய அலியர் மற்றும் லிமோசின் பிரதேசங்களில் "பேட் ஆக்ஸ் பொமிஸ் டி டெரே" என்ற உருளைக்கிழங்கு உணவு வகை மிகவும் பரவலாக விரும்பி உட்கொள்ளப்படுகிறது. வேகவைத்து பொறித்த உருளைக்கிழங்குடன், தக்காளிச்சாறு சேர்த்து தயாரிக்கப்படும் "பொட்டட்டோ பிரேவாஸ்" என்ற உணவு ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலம்.
இத்தாலி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பவேரியா, லக்சம்பர்க் பகுதிகளில் "நோக்கி" என்ற உணவு மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் வேக வைக்கப்பட்ட உருளைக்கிழங்குடன் இறைச்சி சேர்த்து, உணவாக பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர பல்வேறு சூப்புகள் தயாரித்தலில் உருளைக்கிழங்கு பிரதான இடத்தை பிடித்துள்ளது. உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யப்படும் "விச்சிசொய்ஸ்" என்ற சூப் உலக புகழ்பெற்றது. "பாப்பாஸ் ஆருதாஸ்", "டார்டிலா டி பொட்டட்டோ" (உருளைக்கிழங்கு ஆம்லேட்) போன்றவை உருளைக்கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐரோப்பிய உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்தியா
உலகின் ஒழுங்கிற்கு இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?. வடஇந்தியர்களின் உணவில் உருளைக்கிழங்கு ஏதாவது ஒரு ரூபத்தில் அன்றாடம் இடம்பெறும். பொதுவாக இந்தியாவின் வடபகுதியில் கோதுமை உணவு வகைகளும், தென்னிந்தியாவில் அரிசியுமே மக்களின் தினசரி உணவாக விளங்குகின்றன. வடஇந்தியர்களின் அன்றாட உணவான சப்பாத்திக்கான குருமாவின் முக்கிய ஆதாரமே உருளைக்கிழங்குதான் என்பது அனைவருக்கும் தெரியும். தென்னிந்தியாவில் மக்களின் பாரம்பரிய உணவுகளான சாம்பார், குழம்பு உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி பொறியல், அவியல் என பலவிதமான உணவுகளையும் தயாரிக்கின்றனர். இவ்வாறாக உருளைக்கிழங்கு உலகம் முழுமையும் சிறுவர் முதல் பெரியவர் முதல் விரும்பும் உணவாக உருளைக்கிழங்கு திகழ்கிறது.

பிற பயன்பாடுகள்
வோட்கா போன்ற மதுபானங்கள் தயாரித்தலில் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வீட்டில் வளர்க்கப்படம் பிராணிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. ஜவுளி மற்றும் பேப்பர், போர்டு தயாரிப்பின் போது தேவையான கரிம வேதிப்பொருட்களை உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கலாம். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிற்காக, உருளைக்கிழங்கை பயன்படுத்தி பாலிலாக்டிக் அமிலம் தயாரிப்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

டாலரின் எதிர்காலம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெடித்த, வீட்டுக்கடன் பிரச்சினையை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால் அமெரிக்காவில் பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 158 ஆண்டு பெருமை வாய்ந்த லேமென் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச் மற்றும் பல மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் திவாலாகின. மிகப்பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனமான அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் போன்ற பல்வேறு நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் அமெரிக்க அரசின் தலையீட்டின் பேரில் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக சமீபத்தில் கடந்த ஜுன் முதல் தேதியன்று அமெரிக்காவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் நிதி நெருக்கடியினால் தடுமாறி வருவது வெளிப்படையாகவே கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்க நாணயமான டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்திற்கு ஏதும் பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசு இந்த பொருளாதார பெருமந்தத்திலிருந்து மீண்டு வர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் டாலரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. 21ம் நூற்றாண்டின் மத்தியில் டாலர் தனது உலக சேமிப்பு நாணய அந்தஸ்தை இழந்து விடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் பலர் மதிப்பீடு செய்துள்ளனர்.

உலக சேமிப்பு நாணயம் (World's Reserve Currency)

உலகின் அதிகமான நாடுகளின் அரசு கருவூலங்களில் அன்னிய செலாவணி கையிருப்பாக எந்த நாட்டின் நாணயம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதோ அதுவே உலக பொது நாணயமாகும். உலகளாவிய வர்த்தகத்தில் தங்கம், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இந்த நாணயத்தின் அடிப்படையிலலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. இன்றைய உலகின் சேமிப்பு நாணயமாக அமெரிக்காவின் டாலர் திகழ்கிறது.

டாலர் உலக சேமிப்பு நாணயமான வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ உலகின் அரைவாசி நாடுகளை தன்வசம் வைத்திருந்த இங்கிலாந்து நாடுகளிடையேயான வர்த்தகத்தில் தங்கத்தை பொதுநாணயமாக்கியது. இதன்படி, ஒவ்வொரு நாடும் கைவசம் வைத்துள்ள தங்கத்தின் அடிப்படையில் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதனால் தான் அந்நாட்டு நாணயத்திற்கு பவுண்ட் ஸ்டெர்லிங் என்ற பெயரே வந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனின் ஸ்டெர்லிங்கே உலக பொது நாணயமாக விளங்கியது. 1899ம் ஆண்டு உலக நாடுகளின் அன்னிய செலாவணி கையிருப்பில் ஸ்டெர்லிங் 64%ஆகவும், பிரான்சின் நாணயமான பிராங்க் 16%ஆகவும், ஜெர்மனி நாணயமான மார்க் 15%ஆகவும் இருந்தது. அதுவே 1913ம் ஆண்டில் ஸ்டெர்லிங் 48%ஆக குறைந்தது. அதேநேரத்தில் பிராங்க் 31%சதவீதமாக ஏற்றம் கண்டது. ஜெர்மனியின் மார்க் எந்தவித மாற்றமும் காணாமல் 15%ல் தான் தொடர்ந்தது. இந்த சமயத்தில் அமெரிக்காவின் டாலர் உலகின் எந்த ஒரு நாட்டின் கருவூலத்திலும் சிறிதளவு கூட சேமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் உலகப்போரில் தோல்வியுற்று, பொருளாதார ரீதியாக பலவீனமடைந்ததால் ஜெர்மனியின் மார்க் தனது மதிப்பை இழந்தது. அந்த இடத்தை அமெரிக்காவின் டாலர் பிடித்துக் கொண்டது. அது முதல் தான் டாலர் உலக நாடுகளின் அரசு கருவூலங்களை அலங்கரிக்க தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றொரு நிகழ்வு இரண்டாம் உலகப்போர். இதுவே உலகில் அமெரிக்க ஆதிக்கம் தோன்ற வழிவகுத்தது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா நடுநிலை வகித்து, தன்னை பெரும் சேதத்திலிருந்து காத்துக் கொண்டது. ஆனால் ஐரோப்பிய வல்லரசுளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி மற்றும் ஆசியாவின் ஜப்பான் ஆகிய நாடுகள் காலனி ஆதிக்கப்போட்டியால் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. இதில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தேவையான போர்க்கருவிகளையும், ராணுவ தளவாடங்களையும் இன்ன பிறவற்றையும் அமெரிக்காவிடமிருந்தே வாங்கின. இதனால் அமெரிக்காவின் தொழிற்சாலைகள் இரவு பகலாக இடைவிடாது ராணுவ தளவாட உற்பத்தியில் இறங்கின. இதனால் அமெரிக்காவில் உற்பத்தித்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதேவேளை அமெரிக்கா ஆயுதங்களை கொடுத்ததுடன், அவற்றிற்கு ஈடாக அந்நாடுகளிடமிருந்து தங்கத்தை வற்புறுத்தி பெற்றுக் கொண்டது.

இரண்டாவது உலகப்போரில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேசநாடுகள் வெற்றி பெற்றாலும், போரால் அந்நாடுகள் பலவீனமடைந்திருந்ததால் அவற்றின் பிடியிலிருந்த உலக நாடுகள் விடுதலை பெற ஆரம்பித்துவிட்டன. மேலும் போரால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டதால் தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவு அமெரிக்காவின் பங்களிப்பாக இருந்தது. மேலும் உலகின் தங்க கையிருப்பில் பெரும் பகுதி அமெரிக்காவின் வசமே இருந்தது. ஆகவே அதுவரை கோலோச்சி வந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் ராணுவ, பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உயர்ந்தது.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர், உலகளாவிய நிதி மற்றும் வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதிக்க அமெரிக்காவில் உள்ள நியூஹாம்ப்ஷயர் நகரில் பிரெட்டன்உட்ஸ் என்ற இடத்தில் 44 நாடுகளை சேர்ந்த 730 பிரதிநிதிகள் கூடினர். அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையே பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கை எனப்படுகிறது. இதன்படி, உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் வெளியில் புழக்கத்திற்கு விடும் நாணயத்திற்கு நிகராக தங்கத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். இதன் சிறப்பம்சம் யாதெனில் டாலரின் மதிப்பு மாறாது. நிலையானது. உலகின் பிற நாடுகள் தங்கள் நாடுகளின் நாணய மதிப்பை டாலருக்கு நிகராக பராமரிக்க வேண்டும். அதாவது, ஒருநாட்டின் நாணயத்தின் மதிப்பு டாலரை விட உயர்ந்துவிட்டால், அந்நாட்டின் மத்திய வங்கி தனது நாட்டின் நாணயத்தை விற்று, அதற்கு ஈடாக டாலரை பெற்று தனது நாட்டின் நாணய மதிப்பை டாலருக்கு நிகராக்க வேண்டும். அதேபோல் டாலரின் மதிப்பை விட குறைந்து விட்டால், மத்திய வங்கி தனது நாட்டின் நாணயத்தை வாங்கிக் கொண்டு, தனது நாட்டு நாணயத்தின் மதிப்பை டாலருக்கு நிகராக அதிகரிக்க வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டில் அறுபதுகளின் இறுதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து தங்கத்தை திருப்பிக் கேட்டன. ஆனால் அமெரிக்கா திருப்பித்தர மறுத்தது. மேலும் தங்கத்திற்கு பதிலாக டாலரை சேமிக்குமாறு அந்நாடுகளை வற்புறுத்தியது. மேலும் அமெரிக்காவில் அதிகரித்து வந்த வர்த்தக பற்றாக்குறையும், பணவீக்கமும் டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தின. இதுபோன்ற நெருக்கடிகளால் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். மேலும் தங்கத்திற்கு நிகராக டாலரின் பெறுமதியை நிர்ணயம் செய்வதிலிருந்து, தங்கத்தை கழட்டி விட்டது. அதேநேரம் சவுதி அரேபியாவை அணுகி அதன் பெட்ரோலலை டாலரில் மட்டுமே விற்பனை செய்ய சம்மதிக்க வைத்தது. 1971ம் ஆண்டிலேயே 'ஒபெக்' எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் பெட்ரோலியப் பொருட்களுக்கு டாலரில் விலை நிர்ணயம் செய்ய சம்மதிக்க வைத்து விட்டது அமெரிக்கா. ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளும் எரிபொருள் தேவைக்காக இந்நாடுகளையே சார்ந்திருக்கின்றன. ஆகவே அனைத்து நாடுகளும் தங்கள் கருவூலங்களில் டாலரை சேமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறாக டாலர் உலக சேமிப்பு நாணயமாக உயர்ந்தது.

அமெரிக்காவிற்கான அனுகூலங்கள்
டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்தால் இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்கா வெறுமனே தனது டாலர் தாள்களை கொடுப்பதாலேயே எளிதாக பெற்றுக் கொள்கிறது. இதற்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு வெறும் காகிதத்தை அச்சிட ஆகும் செலவு மட்டுமே. இப்படித்தான் அமெரிக்கா பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொஞ்சமும் சிரமமில்லாமல் வாங்கிக் குவிக்கிறது. ஏனெனில் அனைத்து நாடுகளுக்கும் உலக வர்த்தகத்திற்கு டாலர் மிகவும் அவசியமாக இருப்பதால் இது மிகவும் எளிதாகிறது.

யூரோவின் வருகை
ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 16 நாடுகள் ஒருங்கிணைந்து 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி யூரோ என்ற நாணயத்தை வெளியிட்டன. இந்நாடுகள் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்து ''யூரோசோன்'' என்றழைக்கப்படுகின்றன. இது டாலருக்கு கடும் சவாலை ஏற்படுத்தியதற்கு காரணம் யூரோசோன் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையும், அவற்றின் பொருளாதார வலிமையுமே. ஏனெனில் இந்நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை விடவும் வலிமையானது. ஆகவே உலக நாடுகளால் யூரோ மிகவும் விரும்பப்பட்டது. அறிமுகமான ஆண்டில் உலக அன்னிய செலாவணி கையிருப்பில் 17.9%ஆக இருந்த யூரோ 2008ம் ஆண்டில் 26.5%ஆக உயர்ந்தது. அதேநேரம் டாலரின் அளவு 70.9%லிருந்து 64% சதவீதமாக குறைந்தது.

யூரோவுக்கு எதிராக அமெரிக்கா
ஐநா தீர்மானத்தையும் மீறி, பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறி கடந்த 2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. உண்மையில் இந்த போர் ஈராக் நாட்டிற்கு எதிரானதல்ல. ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக குறிப்பாக யூரோசோன் நாடுகளுக்கு எதிரான போரே. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது யூரோ நாணயத்திற்கு எதிரான போரே. அமெரிக்காற்விற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான பொருளாதார ஆதிக்க போட்டியின் அப்பட்டமான வெளிப்பாடே ஈராக் மீதான போர்.

ஈராக் போருக்கான உண்மையான காரணம் அந்நாடு பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது அல்ல. மாறாக அது தனது பெட்ரோல் விற்பனையை கடந்த 2000வது ஆண்டு நவம்பர் மாதம் 6ம் நாள் டாலரிலிருந்து யூரோவிற்கு மாற்றியதே. ஆரம்பத்தில் இதை பெரிய விஷயமாக கருதாத அமெரிக்கா, பின்னர் தான் ஏற்படவிருந்த விபரீதத்தை எண்ணி விழித்துக் கொண்டது. ஏனெனில் ஈராக் எண்ணெய் விற்பனையை யூரோவில் லாபகரமாக செய்வதை பார்த்து, பிற நாடுகளும் யூரோவிற்கு மாறக்கூடும். இதனால் யூரோவின் மதிப்பு கூடும். மேலும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் யூரோசோனில் இணையலாம். இதனால் யூரோவின் மதிப்பு மேலும் நிலையாகவும், யூரோசோனின் பொருளாதாரம் வலிமையானதாகவும் மாறக்கூடும். இது உலகின் ஏனைய நாடுகளும் யூரோவிற்கு மாறுவதற்கு வழிவகுத்து விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அமெரிக்காவே திவாலாகி விடும். எப்படி தெரியுமா?

தற்போது உலக நாடுகள் தங்களது உற்பத்தி பொருட்களை அமெரிக்காவிடம் கொடுத்து, பதிலாக டாலரை பெற்றுக் கொள்கின்றன. பெட்ரோல் விற்பனையின் பலனாக அந்த டாலர் ஒபெக் நாடுகளிடம் சேர்கிறது. அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில் ஒபெக் நாடுகள் முதலீடு செய்வதன் மூலம் இந்த டாலர் தாள்கள் மீண்டும் அமெரிக்காவின் வசமே சென்று விடுகின்றன. இவ்வாறு எந்த ஒரு உழைப்போ, செலவோ இல்லாமல் அமெரிக்காவில் முதலீடுகள் குவிகின்றன. அந்த கடன் பத்திரங்களுக்கான பணத்தை திருப்பி செலுத்தும் கடமை அமெரிக்க அரசிற்கு உண்டு. ஆனால் அமெரிக்க அரசு ஒபெக் நாடுகளிடம் இந்த கடன் பத்திரங்களை செல்லுபடியாக்கும்படியான ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதனால் இந்த கடன் பத்திரங்களை பெறும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுத்து ஈட்டுத்தொகை தருமாறு கோரியதில்லை. மாறாக உலக வர்த்தகத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால் அந்த கடன் பத்திரங்கள் பல்வேறு நாடுகளின் கைகளில் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒருநாள் டாலர் திடீரென உலக சேமிப்பு நாணய அந்தஸ்தை இழந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் கருவூலங்களில் சேமித்து வைத்துள்ள டாலரை திருப்பி கொடுத்துவிடவே விரும்பும். அதுபோல் கடன் பத்திரங்களை தன்வசம் வைத்துள்ள நாடுகள் அவற்றை அமெரிக்க அரசிடம் கொடுத்து, அதற்கு ஈடாக பணம் பெற விழையும். ஆனால் அமெரிக்க அரசால் அது முடியாது. ஆகவே திவாலாவதை தவிர வேறு வழியில்லை. என்ன சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா திவாலாகும் என்பதை நம்ப முடியவில்லையா? இதை பின்வரும் உதாரணத்தின் மூலம் காண்போம்.

'A' என்பவர் ஒரு வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து விட்டு தன் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையிலும், ஒரு செக் கொடுக்கிறார். ஆனால் அவர் இனறியமையாத பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களிடம் (பெட்ரோல், கியாஸ் விற்பனையாளர்கள்) ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். என்னவெனில் அந்த செக்கை அவர்களிடத்திலே செல்லத்தக்கதாக்கும் ஒப்பந்தமே அது. இதன் மூலம் அந்த செக் பணம் இல்லாமலேயே காய்கறி கடைக்காரர், மளிகை கடைக்காரர், பெரும் தொழிலதிபர்கள் என ஒருவர் மாறி மற்றொருவர் கைகளுக்கு சென்று கொண்டேயிருக்கிறது. இப்போது செக்கிற்கு மதிப்பிருந்தாலும் வங்கியில் பணம் அந்த கணக்கில் பணம் இல்லை. திடீரென ஒருநாள் 'A' உடன் ஒப்பந்தம் செய்தவர்களில் ஒருவர் செக்கை செல்லாததாக அறிவித்து விட்டார் என்றால், செக்கை வைத்திருப்பவர் 'A' யிடம் சென்று பணம் கேட்கிறார். இந்நிலையில் 'A' மிகவும் பலமானவர், செக்கை வைத்திருப்பவரும் பலமானவர் என்னும் நிலையில் அவரிடம் தனது வீரத்தை காட்ட இயலாமல், செக்கை செல்லாததாக அறிவித்தவரிடம் சென்று 'A' ண்டை போடுகிறார். இதுதான் ஈராக் விஷயத்தில் நடந்தது.

டாலருக்கு சவால்
வீட்டுக்கடன் பிரச்சினையை தொடர்ந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அமெரிக்கவில் நிதி நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தையும் பாதித்தது. ஏனெனில் உலகமயமாக்கலின் விளைவாக எல்லா நாடுகளின் பொருளாதாரமும் அமெரிக்கா பொருளாதாரத்துடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டுள்ளது. உலக பொருளாதாரம் அமெரிக்காவை மையமாக கொண்டது தான். அமெரிக்காவின் இன்றைய நெருக்கடி நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் "புதிய உலக பொது நாணயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அது பன்னாட்டு நிதி நிறுவனத்தால் பராமரிக்கப்பட வேண்டும். அது தனி ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடு இணைந்திருக்க கூடாது" என்று 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடந்த ஜி-20 மாநாட்டில் வலியுறுத்தின. உலக நாடுகள் இந்த திட்டத்தை ஏற்கா விட்டாலும் கூட, இக்கருத்து அந்நாடுகளிடையே புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபெக் நாடுகளும் கூட தங்களிடையே பொதுநாணயம் வெளியிட கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் எதிர்ப்புகளையும், ராஜதந்திரங்களையும் மீறி வரும் 2011ம் ஆண்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டால் அது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அந்நாடுகள் டாலரில் பெட்ரோலுக்கான விலையை நிர்ணயம் செய்வதே டாலரின் செல்வாக்குக்கு காரணம். புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்த நாணயத்தில் அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முற்பட்டால் டாலரின் செல்வாக்கு ஒரே நாளில் சரிந்து விடும் என்பது தெளிவு. டாலரின் உலக சேமிப்பு நாணய அந்தஸ்தால் அமெரிக்க பொருளாதாரம் பெற்றுள்ள சாதகமான அனுகூலங்கள் பல நாடுகளின் கண்களை உறுத்தி வருகிறது.

டாலரின் எதிர்காலம்
உலக நாடுகளின் அன்னிய செலாவணி கையிருப்பு 1999ம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 2006ம் ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 70% டாலர் தான். இது உலக பொருளாதாரத்தின் மீதான அமெரிக்காவின் பிடியை மேலும் இறுக்கியுள்ளது. மேலும் அன்னிய செலாவணி கையிருப்பில் முதலிடம் வகிக்கும் சீனாவும், ஜப்பானும் மற்றும் ஒபெக் நாடுகளும் டாலர் மதிப்பு குறைவதை ஒருபோதும் விரும்ப போவதில்லை. ஏனெனில் அந்த நாடுகளின் கருவூலங்கள் கழுத்துவரை டாலரால் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சீனா பெருமளவு முதலீடு செய்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானால் அது இந்நாடுகளையும் மிக மோசமாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவுடனான போருக்கு முன்பு வரை ஜெர்மனி, பிரான்ஸ் போன் ஐரோப்பிய வல்லரசுகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அது அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து தன்னை காக்கும் என்று அவர் நம்பினார். அந்தோ பரிதாபம்! பொருளாதார ரீதியாக தங்களுக்குள் ஒருங்கிணைந்த ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென ஒரு பொதுவான ராணுவ அமைப்பை கொண்டிராததால், அவற்றால் அமெரிக்காவை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த போரின் மூலம் யூரோவிற்கு மாற விரும்பிய நாடுகளுக்கு சரியான பாடம் புகட்டும் அமெரிக்காவின் எண்ணமும் ஈடேறி விட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய பலமே அதன் மிதமிஞ்சிய ராணுவ பலம் தான். அது தன் பொருளாதாரத்தை காக்க, டாலரை உலக சேமிப்பு நாணயமாக நிலைநிறுத்த போரில் ஈடுபடவும் தயங்காது என்பதையே இது காட்டுகிறது.

எதிர்காலத்தின் பொருளாதார வல்லரசாக கருதப்படும் சீனாவின் நாணயமான யுவானின் வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அது இன்னும் வளர வேண்டியுள்ளது. மேலும் அந்நாட்டின் ஆட்சிமுறை, கட்டுப்பாடுகள் வெளிநாடுகளின் முதலீடுகள் குவிவதை தடுத்து வருகிறது. ஏனெனில் முதலீடு செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் பணத்திற்கான குறைந்தபட்ச உத்தரவாதத்தை எதிர்பார்ப்பர் அல்லவா!

தற்போது ஐரோப்பிய யூனியனில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா, அவற்றிற்கிடையே ராணுவ ரீதியிலான ஒருங்கிணைப்பின்மை, சீன யுவானின் முதிர்ச்சியின்மை மற்றும் தனது ராணுவ பலம் ஆகியவற்றின் மூலம் தனது டாலரின் உலக சேமிப்பு நாணயமாக அந்தஸ்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காத்துக் கொள்ளும் என்றே தெரிகிறது. 21ம் நூற்றாண்டின் மத்தியில் டாலர் தனது செல்வாக்கை இழந்து விடும் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கணிப்பாகவே தெரிகிறது.