ஐரோப்பாவில் ஒரு இருண்ட ஆப்பிரிக்கா

இந்தியா போன்ற வளரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போதெல்லாம் ஓடோடி வந்து அறிவுரை வழங்கும் ஐரோப்பிய நாடுகள் இன்று தாமே பொருளாதாரச் சுழலில் சிக்கித் தத்தளிக்கின்றன. ‘’எதைத் தின்றால் பித்தம் தெளியும்என்ற நிலையில் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் மண்டையை உடைத்துக் கொண்டுள்ளன. 17 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட, யூரோவைப் பொதுநாணயமாக ஏற்றுக் கொண்ட யூரோசோன் அமைப்பில் ஜெர்மனி, பிரான்ஸ் தவிர மற்ற நாடுகள் அனைத்திலும் அரசின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்து விட்டதுஉச்சகட்டமாக, ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த கிரீஸ் இன்று மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. யூரோசோன் அமைப்பில் ஜெர்மனி, பிரான்சை அடுத்து மூன்றாவது பெரிய தொழில்வள நாடான இத்தாலியின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டிருப்பது உலக நாடுகளிடையே கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளின் கடன்சுமையால் பங்குவர்த்தகத்தில் சரிவு என்பது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அன்றாடச் செய்தியாகிவிட்டது. இதனை, அனுதினமும் படித்து அசைபோடும் நமக்கு, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களை அழுத்திக் கொண்டிருக்கும் கடன்சுமை, மக்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது? வளர்ந்த, ஒளி வீசும் ஐரோப்பாவில் சத்தமில்லாமல் ஒரு இருண்ட ஆப்பிரிக்கா உருவாகி வருகிறது என்பது தெரியுமா? ஆம். நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

கடன் சுமையில் இருந்து விடுபட ஐரோப்பிய அரசுகள் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் மக்களை விழிபிதுங்கச் செய்துள்ளன. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் நலவாழ்வுத் திட்டங்களுக்கான நிதி பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. பென்ஷன் திட்டங்கள் ரத்து செய்யப்பபட்டுவிட்டன. தனியார் துறையைப் போல அரசுகளும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. உக்ரைனில், செர்னோபில் அணுஉலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் திட்டம் கூட ரத்து செய்யப்பட்டுவிட்டது. நிதி நெருக்கடியில் இருந்து விடுபடவே இந்த கசப்பு மருந்து என்று அரசாங்கங்கள் கூறினாலும், பாரம் சுமப்பவர்கள் என்னவோ சாமான்ய மக்கள்தான்.

குளிர் பிரதேசமான ஐரோப்பாவில் தற்போது, உறைய வைக்கும் குளிர், மக்களை வாட்டியெடுக்கும் நிலையில் குளிரை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் வெப்பமூட்டும் கருவிகள் அவசியம். இந்த கருவிகள் இயங்கத் தேவையான எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிரீஸ், ருமேனியா போன்ற நாடுகளில் உயர்த்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக, ஐரோப்பாவில் வறுமையின் அடையாளமாகக் கருதப்படும் மரக்கரியால் எரிக்கப்படும் அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில், இவ்வகை அடுப்புகளின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏழை நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் பிராட் நகர மக்கள், மைனஸ் 30 டிகிரி குளிரில் படும் அவதியைக் காண சகிக்காத அந்நகர மேயர் ஃபுளோரின், 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து அரசு ஒதுக்கீட்டில் இருந்து மக்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ருமேனியா, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையேற்றமும் மக்களின் கையைக் கடிக்கிறது. கடன் சுமையில் தத்தளிக்கும் பிற யூரோசோன் நாடுகளுக்கு நிதியுதவி அளித்து காப்பாற்றும் ஆபாத்பாந்தனாக விளங்கும் ஜெர்மனியிலும் நிலைமை அப்படியொன்றும் திருப்திகரமாக இல்லை. உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடிய போது நம் ஊரில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டது போல, ஜெர்மனி முழுவதும் 700 இடங்களில் சூப் கிச்சன்கள் திறக்கப்பட்டுள்ளன. பெர்லின், பிராங்பர்ட் போன்ற முக்கிய நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் காணப்படும் இந்த கஞ்சித் தொட்டிகளில் நாள்தோறும் 10 லட்சம் ஜெர்மானியர்கள் பசியாறுகின்றனர் என்று கூறுகிறது அங்குள்ள பெரைட்டி வெல்ஃபேர் அசோசியேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமை பாதிப்பிற்கு நடுத்தர மக்களும் விதிவிலக்கு அல்ல. பிரான்சில் தலைநகர் பாரிஸ் உள்பட தேசம் முழுவதும் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாரிசில் உள்ள கிரிடிட் முனிசிபல் என்ற நிதி நிறுவனம், நாள்தோறும் 700 பேர் புதிதாக கடன் பெற்றுச் செல்வதாகக் கூறுகிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களைவிட செல்லப் பிராணிகளையே அதிகம் நேசிப்பவர்கள் என்று பிரிட்டிஷ்காரர்கள் குறித்து சொல்வதுண்டு. அத்தகைய பிரிட்டனில் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் பராமரிக்கப் பணம் இல்லாமல் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளைக் கைவிடும் போக்கு அதிகரித்து வருகிறது, இன்னும் ஒருபடி மேலே போய், செல்லப்பிராணிகளை இன்சூரன்ஸ் செய்திருப்போரில் சிலர், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக அவற்றைக் கொலை செய்வதாக ‘’தி கார்டியன்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலிலும், பிரிட்டனில் முதல் 100 இடங்களை வகிக்கும் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளின் சம்பளம் கடந்த ஓராண்டில் 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சமான அணுகுமுறையால் கொந்தளித்த தொழிலாளர்கள், கடந்த நவம்பர் 30ம் தேதி பொது வேலைநிறுத்தத்தில் இறங்கி பிரிட்டனையே ஸ்தம்பிக்கச் செய்தனர். இதன் காரணமாக லண்டன்டெல்லி இடையேயான 4 விமான சேவைகளும் ரத்தாயின. அமெரிக்காவில் தொடங்கிய வால் ஸ்டிரீட் முற்றுகைப் போராட்டம் லண்டன், பெர்லின், பிராங்பர்ட், பாரிஸ், மாட்ரிட் என ஐரோப்பிய நகரங்களிலும் எதிரொலித்தது.

அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளாலும், வேலையிழப்பாலும் அதிருப்தியடைந்துள்ள மக்களை ஓரளவேனும் சமாதானப்படுத்த உணவுக்கான நிதியுதவித் திட்டத்தை வரும் 2014ம் ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்துள்ளது. யூரோசோன் பொருளாதாரக் கூட்டமைப்பு சிதையாமலும், யூரோ நாணயம் சேதாரமடையாமலும் பாதுகாக்க கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கும் பணியை ஜெர்மனியும், பிரான்சும் முன்னெடுத்துச் செல்கின்றன.


இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை மக்களிடையே வெகுவாகக் குறைந்துவிட்டது.. அண்மையில், மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய ஆய்வு ஒன்றில், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களில் கூட 80%க்கும் அதிகமான மக்கள் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த ஆய்வில், சவுதி அரேபியாவைத் தொடர்ந்து இந்தியா 2வது இடத்தில் இருந்தது. ஒரு காலத்தில் உலகையே ஆட்சி செய்த ஐரோப்பா, இன்று சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் உதவியை நாடுகிறது. இதுதான் காலம் செய்த கோலம் என்பதோ?

காங்கிரசின் ராஜதந்திரம் பலிக்குமா?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறது மத்திய அரசு. எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி சொந்தக் கட்சியிலும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. அங்கேதான் காங்கிரசின் ராஜதந்திரம்சாரிகுள்ள நரித்தனம் ஒளிந்துள்ளது.

கடந்த 22ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு எதிர்கொள்ளவிருந்த பிரச்சினைகள் ஏராளம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தி நாடு தழுவிய ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அதுதொடர்பாக பாஜக சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டிஸ் கொடுத்திருந்தார். அதிகரித்து வரும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி ஆகியவற்றுக்கு எதிராக மற்றொரு ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் தீர்மானித்திருந்தன.


மற்றொரு புறம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப் போவதாக பயமுறுத்தினார். ஆந்திராவை முடக்கிப் போட்டுள்ள தெலங்கானா பிரச்சினை காங்கிரசை நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது.  இவை எல்லாவற்றையும் விட காங்கிரசை அதிகமாக பீதியில் ஆழ்த்தியது உள்துறை அமைச்சர் .சிதம்பரம் விவகாரம்தான்.

2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் .சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் .சிதம்பரத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது காங்கிரசின் வயிற்றில் புளியைக் கரைத்தது. எதிர்க்கட்சிகளின் இதேபோன்ற அணுகுமுறையால்தான் .ராசாவும், தயாநிதி மாறனும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக நேரிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் மட்டுமே தொடர்பு இருப்பதாகக் கூறி தப்பிக்க நினைத்த காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துவிட்டது.

இதுபோன்ற
கடும் நெருக்கடிகளுக்கு இடையே கடந்த 24ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, யாருமே எதிர்பாராத வகையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்தது. பாசு என்பவர் தலைமையிலான நிதித்துறை வருடாந்திர ஆய்வுக்குழுவின் பரிந்துரைப் படி இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது, விலைவாசி உயர்வு, கறுப்புப் பணம், அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் என அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஒரே அறிவிப்பு அடித்துச் சென்றுவிட்டது. அன்னா ஹசாரே தன்னை கண்டுகொள்ள ஆளில்லாமல் இன்று செய்வதறியாது நிற்கிறார்.

நாடாளுமன்றம்
, காட்சி மாறாமல் தொடர்ந்து முடங்கியிருந்தாலும் அதற்கான காரணம் மாறிவிட்டது. விலைவாசி உயர்வு, ஊழல், கறுப்புப் பணம் போன்ற பிரச்சினைகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டன. விலைவாசி உயர்வு, ஊழல் பிரச்சினைகளில் பாஜகவுடன் இணக்கம் காட்ட தயங்கிய இடதுசாரிகள், இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட்டன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரசை அடுத்த பெரிய கட்சிகளான திரிணாமுல் காங்கிரசும், திமுகவும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும், அரசின் முடிவை கடுமையாக விமர்சித்தன.

மேற்குவங்க
முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேற்குவங்கத்தில் கடை திறக்க அனுமதி இல்லை என்று உடனடியாக அறிவித்ததோடு, நாடாளுமன்றத்திலும் அரசின் முடிவை தமது கட்சி எதிர்க்கும் என்று கூறிவிட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை என்று அம்மாநில முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி உறுதிபடக் கூறிவிட்டார். அவர்களுக்குத் தானும் சளைத்தவர் அல்ல என்று கூறும் விதமாக, மத்திய அரசின் முடிவை தமிழகத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசைக் காட்டமாக விமர்சித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்குக் எழுதவும் தவறவில்லை.

பாஜக
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவித்தாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் 10 மாநிலங்கள் மட்டுமே, மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளே காங்கிரசை காலைவாரி விட்ட நிலையில், எதிர் முகாமான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோன்மணி அகாலிதளம் மத்திய அரசின் முடிவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்திலும்
, கேரளாவிலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புக் குரல் வலுத்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே .கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், கே.டி.தாமஸ் உள்பட அரை டஜன் அமைச்சர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தியின் சொந்தத் தொகுதியான அமேதியை அடுத்துள்ள சுல்தான்பூரில் போட்டியிட்டு வென்ற சஞ்சய் சிங், மத்திய அரசின் முடிவை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். மத்திய அரசின் முடிவு விவசாயிகளையும், சிறு வர்த்தகர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறாக
, பலமுனைகளிலும் எதிர்ப்பு வலுத்த பின்னரே, சில்லறை வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது கொள்முதலில் 30 சதவிகிதத்தை உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய நிபந்தனையை திங்கட்கிழமையன்று மத்திய அரசு அறிவித்தது. கடந்த வெள்ளிக் கிழமை, இதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பது உலக வர்த்தக கூட்டமைப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறிய மத்திய அரசு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கியது. ஆனாலும், சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாகக் கூறிவிட்டார்.

எதிர்க்கட்சிகளும்
தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்துவிட்டதால், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இனி வரும் நாட்களிலும் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறப் போவதில்லை என்பது உறுதி. மக்கள் பிரச்சினைகளைப் பேசும் விவாதக்களமாக இருக்க வேண்டிய, ஜனநாயகத்தின் இதயமான நாடாளுமன்றம் இருதரப்பினராலும் போர்க்களமாக மாற்றப்பட்டுவிட்டது. ஒருவழியாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கியுள்ள .சிதம்பரத்தைக் காப்பாற்றும் காங்கிரஸ் கட்சியின் எண்ணமும் தற்காலிகமாக ஈடேறியுள்ளது.