இந்தியா போன்ற வளரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போதெல்லாம் ஓடோடி வந்து அறிவுரை வழங்கும் ஐரோப்பிய நாடுகள் இன்று தாமே பொருளாதாரச் சுழலில் சிக்கித் தத்தளிக்கின்றன. ‘’எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் மண்டையை உடைத்துக் கொண்டுள்ளன. 17 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட, யூரோவைப் பொதுநாணயமாக ஏற்றுக் கொண்ட யூரோசோன் அமைப்பில் ஜெர்மனி, பிரான்ஸ் தவிர மற்ற நாடுகள் அனைத்திலும் அரசின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்து விட்டது. உச்சகட்டமாக, ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த கிரீஸ் இன்று மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. யூரோசோன் அமைப்பில் ஜெர்மனி, பிரான்சை அடுத்து மூன்றாவது பெரிய தொழில்வள நாடான இத்தாலியின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டிருப்பது உலக நாடுகளிடையே கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளின் கடன்சுமையால் பங்குவர்த்தகத்தில் சரிவு என்பது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அன்றாடச் செய்தியாகிவிட்டது. இதனை, அனுதினமும் படித்து அசைபோடும் நமக்கு, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களை அழுத்திக் கொண்டிருக்கும் கடன்சுமை, மக்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது? வளர்ந்த, ஒளி வீசும் ஐரோப்பாவில் சத்தமில்லாமல் ஒரு இருண்ட ஆப்பிரிக்கா உருவாகி வருகிறது என்பது தெரியுமா? ஆம். நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
கடன் சுமையில் இருந்து விடுபட ஐரோப்பிய அரசுகள் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள் மக்களை விழிபிதுங்கச் செய்துள்ளன. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் நலவாழ்வுத் திட்டங்களுக்கான நிதி பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. பென்ஷன் திட்டங்கள் ரத்து செய்யப்பபட்டுவிட்டன. தனியார் துறையைப் போல அரசுகளும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. உக்ரைனில், செர்னோபில் அணுஉலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் திட்டம் கூட ரத்து செய்யப்பட்டுவிட்டது. நிதி நெருக்கடியில் இருந்து விடுபடவே இந்த கசப்பு மருந்து என்று அரசாங்கங்கள் கூறினாலும், பாரம் சுமப்பவர்கள் என்னவோ சாமான்ய மக்கள்தான்.
குளிர் பிரதேசமான ஐரோப்பாவில் தற்போது, உறைய வைக்கும் குளிர், மக்களை வாட்டியெடுக்கும் நிலையில் குளிரை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் வெப்பமூட்டும் கருவிகள் அவசியம். இந்த கருவிகள் இயங்கத் தேவையான எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிரீஸ், ருமேனியா போன்ற நாடுகளில் உயர்த்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக, ஐரோப்பாவில் வறுமையின் அடையாளமாகக் கருதப்படும் மரக்கரியால் எரிக்கப்படும் அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில், இவ்வகை அடுப்புகளின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏழை நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் பிராட் நகர மக்கள், மைனஸ் 30 டிகிரி குளிரில் படும் அவதியைக் காண சகிக்காத அந்நகர மேயர் ஃபுளோரின், 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து அரசு ஒதுக்கீட்டில் இருந்து மக்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ருமேனியா, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையேற்றமும் மக்களின் கையைக் கடிக்கிறது. கடன் சுமையில் தத்தளிக்கும் பிற யூரோசோன் நாடுகளுக்கு நிதியுதவி அளித்து காப்பாற்றும் ஆபாத்பாந்தனாக விளங்கும் ஜெர்மனியிலும் நிலைமை அப்படியொன்றும் திருப்திகரமாக இல்லை. உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடிய போது நம் ஊரில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டது போல, ஜெர்மனி முழுவதும் 700 இடங்களில் சூப் கிச்சன்கள் திறக்கப்பட்டுள்ளன. பெர்லின், பிராங்பர்ட் போன்ற முக்கிய நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் காணப்படும் இந்த கஞ்சித் தொட்டிகளில் நாள்தோறும் 10 லட்சம் ஜெர்மானியர்கள் பசியாறுகின்றனர் என்று கூறுகிறது அங்குள்ள பெரைட்டி வெல்ஃபேர் அசோசியேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமை பாதிப்பிற்கு நடுத்தர மக்களும் விதிவிலக்கு அல்ல. பிரான்சில் தலைநகர் பாரிஸ் உள்பட தேசம் முழுவதும் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாரிசில் உள்ள கிரிடிட் முனிசிபல் என்ற நிதி நிறுவனம், நாள்தோறும் 700 பேர் புதிதாக கடன் பெற்றுச் செல்வதாகக் கூறுகிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களைவிட செல்லப் பிராணிகளையே அதிகம் நேசிப்பவர்கள் என்று பிரிட்டிஷ்காரர்கள் குறித்து சொல்வதுண்டு. அத்தகைய பிரிட்டனில் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் பராமரிக்கப் பணம் இல்லாமல் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளைக் கைவிடும் போக்கு அதிகரித்து வருகிறது, இன்னும் ஒருபடி மேலே போய், செல்லப்பிராணிகளை இன்சூரன்ஸ் செய்திருப்போரில் சிலர், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக அவற்றைக் கொலை செய்வதாக ‘’தி கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலிலும், பிரிட்டனில் முதல் 100 இடங்களை வகிக்கும் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளின் சம்பளம் கடந்த ஓராண்டில் 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சமான அணுகுமுறையால் கொந்தளித்த தொழிலாளர்கள், கடந்த நவம்பர் 30ம் தேதி பொது வேலைநிறுத்தத்தில் இறங்கி பிரிட்டனையே ஸ்தம்பிக்கச் செய்தனர். இதன் காரணமாக லண்டன் – டெல்லி இடையேயான 4 விமான சேவைகளும் ரத்தாயின. அமெரிக்காவில் தொடங்கிய வால் ஸ்டிரீட் முற்றுகைப் போராட்டம் லண்டன், பெர்லின், பிராங்பர்ட், பாரிஸ், மாட்ரிட் என ஐரோப்பிய நகரங்களிலும் எதிரொலித்தது.
அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளாலும், வேலையிழப்பாலும் அதிருப்தியடைந்துள்ள மக்களை ஓரளவேனும் சமாதானப்படுத்த உணவுக்கான நிதியுதவித் திட்டத்தை வரும் 2014ம் ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்துள்ளது. யூரோசோன் பொருளாதாரக் கூட்டமைப்பு சிதையாமலும், யூரோ நாணயம் சேதாரமடையாமலும் பாதுகாக்க கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கும் பணியை ஜெர்மனியும், பிரான்சும் முன்னெடுத்துச் செல்கின்றன.
இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை மக்களிடையே வெகுவாகக் குறைந்துவிட்டது.. அண்மையில், மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய ஆய்வு ஒன்றில், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களில் கூட 80%க்கும் அதிகமான மக்கள் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த ஆய்வில், சவுதி அரேபியாவைத் தொடர்ந்து இந்தியா 2வது இடத்தில் இருந்தது. ஒரு காலத்தில் உலகையே ஆட்சி செய்த ஐரோப்பா, இன்று சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் உதவியை நாடுகிறது. இதுதான் காலம் செய்த கோலம் என்பதோ?
0 comments:
Post a Comment