காங்கிரசின் ராஜதந்திரம் பலிக்குமா?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறது மத்திய அரசு. எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி சொந்தக் கட்சியிலும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. அங்கேதான் காங்கிரசின் ராஜதந்திரம்சாரிகுள்ள நரித்தனம் ஒளிந்துள்ளது.

கடந்த 22ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு எதிர்கொள்ளவிருந்த பிரச்சினைகள் ஏராளம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தி நாடு தழுவிய ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அதுதொடர்பாக பாஜக சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டிஸ் கொடுத்திருந்தார். அதிகரித்து வரும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி ஆகியவற்றுக்கு எதிராக மற்றொரு ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் தீர்மானித்திருந்தன.


மற்றொரு புறம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப் போவதாக பயமுறுத்தினார். ஆந்திராவை முடக்கிப் போட்டுள்ள தெலங்கானா பிரச்சினை காங்கிரசை நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது.  இவை எல்லாவற்றையும் விட காங்கிரசை அதிகமாக பீதியில் ஆழ்த்தியது உள்துறை அமைச்சர் .சிதம்பரம் விவகாரம்தான்.

2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் .சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் .சிதம்பரத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது காங்கிரசின் வயிற்றில் புளியைக் கரைத்தது. எதிர்க்கட்சிகளின் இதேபோன்ற அணுகுமுறையால்தான் .ராசாவும், தயாநிதி மாறனும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக நேரிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் மட்டுமே தொடர்பு இருப்பதாகக் கூறி தப்பிக்க நினைத்த காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துவிட்டது.

இதுபோன்ற
கடும் நெருக்கடிகளுக்கு இடையே கடந்த 24ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, யாருமே எதிர்பாராத வகையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்தது. பாசு என்பவர் தலைமையிலான நிதித்துறை வருடாந்திர ஆய்வுக்குழுவின் பரிந்துரைப் படி இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது, விலைவாசி உயர்வு, கறுப்புப் பணம், அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் என அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஒரே அறிவிப்பு அடித்துச் சென்றுவிட்டது. அன்னா ஹசாரே தன்னை கண்டுகொள்ள ஆளில்லாமல் இன்று செய்வதறியாது நிற்கிறார்.

நாடாளுமன்றம்
, காட்சி மாறாமல் தொடர்ந்து முடங்கியிருந்தாலும் அதற்கான காரணம் மாறிவிட்டது. விலைவாசி உயர்வு, ஊழல், கறுப்புப் பணம் போன்ற பிரச்சினைகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டன. விலைவாசி உயர்வு, ஊழல் பிரச்சினைகளில் பாஜகவுடன் இணக்கம் காட்ட தயங்கிய இடதுசாரிகள், இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட்டன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரசை அடுத்த பெரிய கட்சிகளான திரிணாமுல் காங்கிரசும், திமுகவும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும், அரசின் முடிவை கடுமையாக விமர்சித்தன.

மேற்குவங்க
முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேற்குவங்கத்தில் கடை திறக்க அனுமதி இல்லை என்று உடனடியாக அறிவித்ததோடு, நாடாளுமன்றத்திலும் அரசின் முடிவை தமது கட்சி எதிர்க்கும் என்று கூறிவிட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை என்று அம்மாநில முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி உறுதிபடக் கூறிவிட்டார். அவர்களுக்குத் தானும் சளைத்தவர் அல்ல என்று கூறும் விதமாக, மத்திய அரசின் முடிவை தமிழகத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசைக் காட்டமாக விமர்சித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்குக் எழுதவும் தவறவில்லை.

பாஜக
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவித்தாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் 10 மாநிலங்கள் மட்டுமே, மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளே காங்கிரசை காலைவாரி விட்ட நிலையில், எதிர் முகாமான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோன்மணி அகாலிதளம் மத்திய அரசின் முடிவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்திலும்
, கேரளாவிலும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புக் குரல் வலுத்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே .கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், கே.டி.தாமஸ் உள்பட அரை டஜன் அமைச்சர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தியின் சொந்தத் தொகுதியான அமேதியை அடுத்துள்ள சுல்தான்பூரில் போட்டியிட்டு வென்ற சஞ்சய் சிங், மத்திய அரசின் முடிவை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். மத்திய அரசின் முடிவு விவசாயிகளையும், சிறு வர்த்தகர்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறாக
, பலமுனைகளிலும் எதிர்ப்பு வலுத்த பின்னரே, சில்லறை வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது கொள்முதலில் 30 சதவிகிதத்தை உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய நிபந்தனையை திங்கட்கிழமையன்று மத்திய அரசு அறிவித்தது. கடந்த வெள்ளிக் கிழமை, இதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பது உலக வர்த்தக கூட்டமைப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறிய மத்திய அரசு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கியது. ஆனாலும், சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாகக் கூறிவிட்டார்.

எதிர்க்கட்சிகளும்
தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்துவிட்டதால், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இனி வரும் நாட்களிலும் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறப் போவதில்லை என்பது உறுதி. மக்கள் பிரச்சினைகளைப் பேசும் விவாதக்களமாக இருக்க வேண்டிய, ஜனநாயகத்தின் இதயமான நாடாளுமன்றம் இருதரப்பினராலும் போர்க்களமாக மாற்றப்பட்டுவிட்டது. ஒருவழியாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கியுள்ள .சிதம்பரத்தைக் காப்பாற்றும் காங்கிரஸ் கட்சியின் எண்ணமும் தற்காலிகமாக ஈடேறியுள்ளது.

0 comments:

Post a Comment