சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வரமா? சாபமா?


கடந்த 17 மாதங்களாக புலி வருது, புலி வருது கதையாக இழுத்துக் கொண்டிருந்த ஒன்று இன்று நிஜமாகிவிட்டது. நவம்பர் 24, வியாழக்கிழமையன்று கூடிய மத்திய அமைச்சரவை, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. அதன்படி, ஒற்றை பிராண்ட் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படுவதோடு, மல்டி பிராண்ட் சில்லறை வணிகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்பது அரசின் வாதம்.

சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய சில்லறை வர்த்தகத்தில் அரசின் இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகளை பார்க்கும் முன், இந்திய சில்லறை வர்த்தக அமைப்பு முறை எவ்வாறானது என்று பார்க்கலாம். விவசாயிகள் அல்லது உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கு பொருட்களைக் கொண்டு சேர்க்கும் நேரடி கொள்முதல் வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், கமிஷன் ஏஜெண்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்கள், பெட்டிக்கடைகள் என அனைவருமே சில்லறை விற்பனையாளர்கள்தான். நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமானோருக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பது சில்லறை வர்த்தகமே. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 4 கோடி பேர் நேரடி வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். 20 கோடி பேர் அவர்களைச் சார்ந்துள்ளனர்.

எதிர்காலத்தை கற்பனை செய்வதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக். 1993இல் இந்தியாவிற்குள் நுழைந்த கொகோ கோலா, பெப்சிகோ ஆகிய நிறுவனங்கள் வெறும் 10 ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த குளிர்பானச் சந்தையையும் முற்றிலுமாகத் தன்வசப்படுத்தி விட்டன. 5 ரூபாய்க்கு குளிர்பானங்களை அறிமுகப்படுத்திய அந்நிறுவனங்கள், குளிர்சாதனப் பெட்டி, கூடுதல் கமிஷன் என்று கூறி சில்லறை விற்பனையாளர்களையும் கவர்ந்துவிட்டன. அந்நிறுவனங்களுடன் போட்டியிட்டு தாக்குப்பிடிக்க முடியாமல் உள்நாட்டு குளிர்பான நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது சில்லறை வர்த்தகமே. ஆனால், இன்று சில்லறை வர்த்தக அமைப்பையே தகர்க்கும் முடிவுக்கு அரசு வந்துள்ளது.

ஒரு  கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க 20 கோடி பேரின் வாழ்க்கையைப் பணயம் வைக்க அரசு துணிந்துவிட்டது. அந்த ஒரு கோடி பேரும் நிம்மதியாக வேலை செய்ய முடியுமா என்றால், அதற்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 70% பேர் முதல் ஆண்டிலேயே பணியில் இருந்து விலகிவிடுவது தெரியவந்துள்ளது. அதிகமான வேலைப்பளு, கூடுதல் நேர வேலைக்கு சம்பளமின்மை, தொழிற்சங்கங்களை ஒடுக்கும் வால்மார்ட் நிறுவனத்தின் குயுக்திகள் போன்றவையே அதற்குக் காரணம். இவை தொடர்பாக வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது அரசு கூறும் மற்றொரு காரணம். அரசின் இந்த வாதம் தொடக்கத்தில் நியாயமானதாக தோன்றலாம். ஆனால், உள்நாட்டு சில்லறை வர்த்தக அமைப்பைச் சிதைத்து இந்தியாவில் வலுவாகக் காலூன்றிய பிறகு, கொகோ கோலா, பெப்சிகோ நிறுவனங்கள் இன்று என்ன செய்கின்றனவோ அதையே வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும். அமெரிக்கப் பெருநிறுவனங்கள் கூறும் விலைக்கே விவசாயிகளும், சிறு, குறு உற்பத்தியாளர்களும் தங்களது விளைபொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது, அந்நிறுவனங்களுடன் போட்டியிடவோ அல்லது அவற்றைத் தட்டிக் கேட்கவோ யாரும் இருக்க மாட்டார்கள். அமெரிக்காவில், விவசாயிகளிடம் இருந்து 40 டாலருக்கு வாங்கிய மக்காச்சோளத்தை இன்று வெறும் 18 டாலருக்கு வால்மார்ட் நிறுவனம் விலைபேசுகிறது, அமெரிக்க அரசு தலையிட்டும் வால்மார்ட் நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை.

அடுத்தபடியாக, பொருட்களின் தரம். இந்த விஷயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கடைபிடிக்கும் நடைமுறையே அலாதியானது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்தர குளிர்பானங்களைத் தயாரிக்கும்  கொகோ கோலா, பெப்சிகோ ஆகிய நிறுவனங்கள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தரம் குறைந்த குளிர்பானங்களையே விற்பனைக்கு அனுப்புகின்றன. நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்விலேயே நிரூபணமான உண்மை இது. அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட விக்ஸ் ஆக்சன் 500, டி-கோல்ட், அனால்ஜின் போன்ற மருந்துகள் இந்தியாவில் அதீத விளம்பரங்களுடன் தாராளமாகக் கிடைக்கின்றன.


கடந்த அக்டோபர் மாதம், தமது தயாரிப்புகளில் பழுது இருப்பது தெரிந்தவுடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 16 லட்சம் டிவிக்களை அவசர, அவசரமாகத் திரும்பப் பெற்ற சோனி நிறுவனம், தமது இந்திய வாடிக்கையாளர்களைக் கண்டுகொள்ளவில்லை. டிவிக்களில் பழுது இருப்பதாகப் புகார் கூறினால், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கேச் சென்று பழுது நீக்கித் தருவதாக அறிக்கை வெளியிட்டு கடமையை முடித்துக் கொண்டது சோனி நிறுவனம். இந்த லட்சணத்தில் பன்னாட்டு  நிறுவனங்கள் இந்திய நுகர்வோருக்குத் தரமான பொருட்களை அளிக்கும் என்று சொன்னால் வேடிக்கையாக இல்லை. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை தங்களது மிகப்பெரிய பரிசோதனைக் கூடமாக அந்நிறுவனங்கள் மாற்றிவிடும், ஜாக்கிரதை. ஏற்கனவே, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது புதிய மருந்துகளை இந்தியாவில் உள்ள ஏழை மக்களைக் கொண்டு பரிசோதனை செய்வதை மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக ஈடுபட அரசு விதித்துள்ள முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே அந்நிறுவனங்கள் கடைவிரிக்க வேண்டும் என்பது. இந்த நிபந்தனையின் கீழ் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் 53 நகரங்கள் வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது சில்லறை விற்பனை நிலையங்களைத் திறக்கலாம்.


பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வர்த்தகத்தில் அனுமதித்தால் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நன்மை கிடைக்கும் என்றும், உள்கட்டமைப்பு வசதி மேம்படும் அரசு கூறுகிறது. நன்மை தரும் ஒரு திட்டத்தை நகர்ப்புறங்களில் மட்டும் செயல்படுத்துவது ஏன்? நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டியதுதானே? அதில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது. லாபம் குறைவு என்பதால் உள்நாட்டு தனியார் நிறுவனங்களே கிராமப்புறங்களில் கிளை திறக்க தயங்கும் போது, அங்கு பன்னாட்டு நிறுவனங்கள் கடை திறக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே, நிபந்தனை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வாரி வழங்கியிருப்பதைப் பாமரர்களும் புரிந்து கொள்வார்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள முக்கியமான, நன்மை தரும் நிபந்தனைகள் விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளை நிறுவுவதில் 50% முதலீடு, சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் இருந்து 30% பொருட்களை கொள்முதல் செய்தல் போன்றவையே. நாடு முழுவதும் விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க 67 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறும் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, அதற்கான நிதியாதாரம் மத்திய அரசிடம் இல்லை என்கிறார். தங்களது இலவசத் திட்டங்களுக்காக சில ஆயிரம் கோடிகளை மாநில அரசுகளே அனாயசமாகத் திரட்டி விடும் போது, மல்லையா போன்ற பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமான விமான நிறுவனங்களை மீட்க நிதி வழங்கும் மத்திய அரசுக்கு, நிதி திரட்டுவது என்பது ஒன்றும் முடியாத காரியமல்ல. இதில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அரசு ஒரு முடிவு எடுத்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறது என்று.

உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்ட பிறகு, இன்றைய  வர்த்தக உலகில் நாம் மட்டும் தனித்து இயங்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது சந்தையைத் திறந்துவிடும் முன்பு அந்நிறுவனங்களை எதிர்கொள்ளத் தக்கவாறு உள்நாட்டில் தனியார் துறையை வலுப்படுத்த வேண்டும். சேமிப்புக் கிடங்குகளை அமைப்பதிலும், விவசாயிகள் மற்றும் சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் இருந்து விளைபொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் நேரடியாக கொள்முதல் செய்வதிலும் தனியார் பங்களிப்புக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சீனாவை உதாரணமாகச் சொல்லும் அரசு, இந்த விஷயத்தில் மட்டும் சீனாவை ஏன் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வசதி படைத்தவர்களுடன் ஏழைகள் போட்டியிட முடியாது என்பதை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ள அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் விஷயத்தில் அந்த நியாயத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது விநோதமாக உள்ளது.

உலக வர்த்தக கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, காட்ஸ் (General Agreement on Trade and Services) ஒப்பந்தப்படி, உள்ளே அனுமதித்த ஒரு நிறுவனத்தைப் பின்னர் வெளியேற்ற முடியாது. அதன் மீது புதிய கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததால் வேலைவாய்ப்பு குறைந்ததைக் கண்ட தாய்லாந்து அரசு, கடந்த 2002ம் ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முயன்று கையைச் சுட்டுக் கொண்டது. எனவே, ஆபத்து நமது வீட்டுக் கதவைத் தட்டும் வரை காத்திருக்கக் கூடாது. வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும்

1 comments:

Nalliah said...

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது, இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை. இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

உலகம்பூராகவும் அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது. மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது. உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

- நல்லையா தயாபரன்

Post a Comment